சென்னை : ‘கடந்த ஆண்டில், 6,586 ரயில் பெட்டிகள், 1,572 ரயில் இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டுள்ளன’ என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது: நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களை மேம்படுத்துவது, ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது, ரயில்களில் புதிய பெட்டிகள் இணைப்பது போன்ற பணிகள் நடந்து வருகின்றன.
சென்னை, பெரம்பூர் ஐ.சி.எப்., ஆலை, பஞ்சாப் மாநிலம் கபூர்தலா, ஆர்.சி.எப்., உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி எம்.சி.எப்., ஆகிய மூன்று ஆலைகளில், கடந்த ஆண்டில், 6,586 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில், 60 சதவீத பெட்டிகள், ஐ.சி.எப்., ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதேபோல், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், பீஹார் மாநிலங்களில் உள்ள, ரயில் இன்ஜின் தயாரிப்பு ஆலைகளில், கடந்த ஆண்டில் மட்டும், 1,572 ரயில் இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டுள்ளன; இது, இதற்கு முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில், 17 சதவீதம் அதிகம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
