சென்னை: “கூடுதல் தொகுதிகளை பெறுவதில் உறுதியாக உள்ளோம்; தேர்தலை புறக்கணிக்க மாட்டோம்,” என, மார்க்சிஸ்ட்

சென்னை: “கூடுதல் தொகுதிகளை பெறுவதில் உறுதியாக உள்ளோம்; தேர்தலை புறக்கணிக்க மாட்டோம்,” என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சண்முகம் கூறினார்.

சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., குழுவினருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதி பங்கீடு பேச்சு குழுவினர், மூன்றாவது கட்டமாக நேற்று பேச்சு நடத்தினர். ஏற்கனவே நடந்த இரண்டு கட்ட பேச்சில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், நேற்று காலையில் நடந்த பேச்சிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

பின், சண்முகம் அளித்த பேட்டி: நிறைய கட்சிகள் கூட்டணியில் இருப்பதால், எங்களையும் தொகுதிகளை குறைக்கும்படி தி.மு.க., தரப்பில் கூறினர்; அதை நாங்கள் ஏற்கவில்லை. அவரவர் தகுதிக்கு ஏற்ப தொகுதிகளை பெறுவது உரிமை.

கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படாவிட்டால், மாநில குழுவை கூட்டி முடிவெடுப்போம்; நாங்கள் தேர்தலை புறக்கணிக்கும் கட்சியல்ல.

எங்களின் கோரிக்கைகளை, முதல்வரிடம் பேசிவிட்டு முடிவை சொல்வதாக தி.மு.க., தரப்பில் சொல்லி உள்ளனர். கூடுதல் தொகுதிகள் பெறுவதே இலக்கு. இவ்வாறு அவர் கூறினார்.

‘தி.மு.க.,விடம் இருந்து ஒரு தொகுதியாவது கூடுதலாக பெறாமல் விட மாட்டோம்’ என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் சண்முகம் கூறி வருகிறார். ஆனால், ‘ஐந்து தொகுதிகளுக்கு சம்மதிக்குமாறு, தி.மு.க., தரப்பில் இருந்து மார்க்சிஸ்ட் முன்னாள் மாநிலச் செயலர்கள் பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணனிடம் பேசியுள்ளனர்.

‘ அதைத் தொடர்ந்து, ஐந்து தொகுதிகளை பெற்றுக் கொண்டு, தொகுதிப் பங்கீட்டை முடித்துக் கொள்ளலாம்’ என, சண்முகத்திற்கு அவர்கள் நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது.

Source link