நெல்லை: காருக்குள் தாயை கட்டியணைத்தபடி கருகிக்கிடந்த குழந்தைகள்; 4 பேர் உயிரிழப்பின் பகீர் பின்னணி!

குடும்பத்துடன் உயிரிழப்பதற்கு சற்று நேரத்துக்கு முன்பு ஆற்றங்கரை பள்ளிவாசல் பகுதியில் உள்ளவர்களுக்கு உணவு அளித்துள்ளனர். அத்துடன், ஏழைகள் மாற்றுத் திறனாளிகளுக்காக புத்தாடை வாங்கி வந்து கொடுத்து மகிழ்ந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஆற்றங்கரை பள்ளிவாசல் உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து வழிபட்டுச் செல்வது வழக்கம். இந்த நிலையில், பெட்டைக்குளத்திலிருந்து ஆற்றங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையில் இருந்து 300 மீட்டர் உள்பகுதியில் கார் ஒன்று எரிந்து கிடந்துள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்று போலிஸார் பார்த்தபோது காரில் உள்ளே நான்கு பேர் உடல் கருகிய நிலையில் கிடந்தனர்.

இது பற்றி அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நெல்லை மாவட்ட எஸ்.பி-யான பிரசன்னகுமார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார். எரிந்து கிடந்த காரின் அருகே காலியான தண்ணீர் பாட்டில்கள் கிடந்தன. அதில் பெட்ரோல் கொண்டுவரப்பட்டு காரின் வெளி மற்றும் உள்பகுதியில் ஊற்றப்பட்டு தீவைக்கப்பட்டு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். காரின் பதிவு எண் எரிந்து விட்டதால் கண்டுபிடிக்க முடியவில்லை அதனால் காரின் ‘சேஸ்’ எண்ணைக் கொண்டு உரிமையாளர் யார் என்பதை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

கடன் தொல்லையால் விபரீத முடிவு!

எரிந்து கிடந்த காரின் உரிமையாளர் சென்னை நந்தம்பாக்கம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த முகம்மது ரபி (45) என்பது தெரியவந்தது. அவருடன் காருக்குள்ள அவரது மனைவி நஸ்ரின் பாத்திமா (40), மகள் ஆப்பரின் பாத்திமா (15), மகன் முஹம்மது காஜா (13) ஆகியோர் இருந்தது தெரியவந்தது. முகமது ரபி சென்னையில் உள்ள கார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துள்ளார். கடன் பிரச்சனையில் சிக்கி அவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டுள்ளார்.

அதன் பின்னர், நந்தம்பாக்கத்தில் உள்ள சொந்த வீட்டை விட்டு விட்டு குடும்பத்துடன் நெல்லைக்கு குடி பெயர்ந்துள்ளார். இந்த நிலையில் நேற்று குடும்பத்தோடு ஆற்றங்கரை பள்ளிவாசல் சென்ற அவர் குடும்பத்தோடு தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இரு தினங்களுக்கு முன்னர் அவர் குடும்பத்துடன் நாகர்கோயில் சென்று அங்குள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். இவர்கள் கடந்த சில வாரங்களில் மட்டும் ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு அடிக்கடி வந்து சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏழைகளுக்கு உதவி; தாயின் அரவணைப்பில் கருகிய குழந்தைகள்!

குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவு செய்த பின் நாகர்கோவிலில் உள்ள துணிக்கடையில் ஏழை மக்களுக்காக துணிமணிகள் வாங்கியுள்ளனர். அவற்றைக் கொண்டு வந்து ஆத்தங்கரை பள்ளிவாசலில் உள்ள ஆதரவற்றவர்களிடம் கொடுத்துவிட்டு, உணவையும் அளித்த பின்னரே தற்கொலை செய்தது அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.

காருக்குள் முகமது ரபி டிரைவர் சீட்டில் அமர்ந்துள்ள நிலையில், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பின் சீட்டில் இருந்துள்ளனர். கார் தீப்பற்றி எரிந்ததும் குழந்தைகள் இருவரும் தாய் நஸ்ரின் பாத்திமாவை கட்டிப் பிடித்துள்ளனர். அதனால் அவர்களது உடல் எரிந்த நிலையிலும் கட்டிப் பிடித்தபடி இருந்தது காண்போரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. கடல் தொல்லைக்காக முகமது ரபி குடும்பத்தினரை யாராவது மிரட்டி தற்கொலைக்குத் தூண்டி இருக்கிறார்களா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link