`5,100 கோடி பட்ஜெட்: 10 கி.மீ சுரங்கம்' மேற்குத் தொடர்ச்சி மலையைத் துளைக்கப்போகும் ஆபத்தான திட்டம்?

தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை முதல் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தின் எடமன் வரையில் 4 வழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தின் புளியரையில் தொடங்கி 10 கிலோமீட்டர் தூரத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலையைக் குடைந்து இரு வழிகளிலும் 11மீ உயரம் கொண்ட சுரங்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ரூ. 5100 கோடி மதிப்பீட்டில் உருவாக்க திட்டமிடப்பட்டிருக்கும் இந்தச் சுரங்கச் சாலையின் முதல் கட்டத்தில்  6.5 கி.மீ. தூரத்திற்கு ஏற்கெனவே இருக்கும் சாலை விரிவாக்கப்படுகிறது. 16.366 கி.மீ. தூரத்திற்கு புதிதாகச் சாலை அமைக்கப்படுகிறது. ரயில் பாதைக்கும், நீர்மின் திட்டங்களுக்கும் மட்டுமே இதுவரை தமிழ்நாட்டில் சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலை

எனவே, இந்தச்சாலை அமைந்தால் இதுதான் தமிழ்நாட்டு எல்லைக்குள் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமையப்போகும் முதல் சுரங்கச்சாலையாக இருக்கும். இத்திட்டத்திற்கு 210 எக்டர் நிலம் தேவைப்படுகிறது. இதில் 48 எக்டர் காப்புக்காடுகளாகும். இதில் நான்கு இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படவுள்ளன.

இத்திட்டத்திற்காகத் தமிழ்நாட்டு எல்லைக்குள் தேவைப்படும் 3.60 எக்டர் காப்புக்காட்டிற்கான அனுமதிகோரி தமிழ்நாடு வனத்துறையிடம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் விண்ணப்பித்துள்ளது. இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, இந்த திட்டத்தால் ஏற்படவிருக்கும் ஆபத்துகளையும், சிக்கல்களையும் பட்டியலிட்டிருக்கின்றனர்.

இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜனிடம் விரிவாகப் பேசினோம். அவர், “தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுரங்கச் சாலைக்காக விண்ணப்பித்திருக்கும் பகுதி தமிழ்நாட்டில் செங்கோட்டை கணவாய் என்று அழைக்கப்படுகிறது. ஆரியங்காவு வழிவே பயணிக்கும் புளியரை முதல்  எடமன் வரையிலான 22.866 கி.மீ. சாலையில் 18.96 கி.மீ கேரளாவிலும் 3.906 கி.மீ. சாலை தமிழ்நாட்டிலும் வருகிறது. இத்திட்டத்திற்கு தேவைபடும் 210 எக்டர் நிலத்தில், 48 எக்டர் காப்புக்காடுகளாகும். வடக்கு, தெற்கு என இருப்பகுதியில் சுரங்கம் அமைக்கப்பட்டு 4 வழிச் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சுரங்கமும் 11 மீட்டர் உயரம் கொண்டது.

பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன்
பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன்

இதில் 10 கி.மீ. தூரத்துக்கான சுரங்கப்பாதை உட்பட 22.866 கி.மீ. சாலையும் ஒன்றிய வன அமைச்சகத்தால் அறிவிக்கை செய்யப்பட்ட அகத்தியமலை உயிர்மண்டலக் காப்பகத்திற்குள் வருகிறது. இது யுனெஸ்கோ  அமைப்பின் மனிதரும் உயிர்மண்டலக் காப்பகமும் (Man and the Biosphere (MAB)) எனும் திட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட இடமாகும். ஒட்டுமொத்த மேற்குத் தொடர்ச்சி  மலையும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் உள்ள 5432.72 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை அகத்தியமலை உயிர்மண்டலக் காப்பாகமாக ஒன்றிய அரசு 200-ம் ஆண்டு அறிவித்திருந்தது.

இக்காப்பகத்தில 2,254 வகையான தாவரங்கள் இருக்கின்றன. அதில் 405 இனங்களை இங்கு மட்டுமே காணமுடியும். ஏலக்காய், நாவல், ஜாதிக்காய், மிளகு, வாழை மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பயிர்த் தாவரங்களின் தனித்துவமான மரபணு களஞ்சியமாகவும் இந்தப் பகுதி திகழ்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலை
மேற்கு தொடர்ச்சி மலை

உயிர்மண்டலக் காப்பகத்தில் வாழும் சுமார் 79 வகையான பாலூட்டிகளுக்கு வாழிடமாக உள்ளது. அவற்றில் 20 உயிரினங்கள் ஓரிட வாழ்விகளாகும். 88 வகையான ஊர்வன, 45 வகையான நீர்நில வாழ் உயிரினங்கள், 46 வகையான மீன் இனங்களும் உள்ளன. மொத்தம் 337 வகையான பறவை இனங்களும், அவற்றில் 20 பறவையினங்கள் ஓரிட வாழ்விகளாவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இச்சுரங்கம் பெரியார் கானுயிர் சரணாலயத்தை தெற்கிலிருக்கும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துடன் இணைக்கும் முக்கியமான புலிகளின் வழித்தடத்தை துண்டிக்கிறது. யானைகளும் இவ்வழித்தடத்தைப் பயன்படுத்துகின்றன.

மறைந்த சூழலியல் அறிஞர் மாதவ் காட்கில் தலைமையிலான நிபுணர் குழு தயாரித்த ‘மேற்குத் தொடர்ச்சி மலைச் சுற்றுச்​சூழல் வல்லுநர் குழு’வின் அறிக்கையும், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தால் 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘Connecting Tiger Populations For Long-Term Conservation’ எனும் அறிக்கையும் இச்சுரங்கச் சாலைத்திட்டம் அமையவுள்ள செங்கோட்டை கணவாய் புலிகள், யானைகள் ஆகியவற்றின் இடம்பெயர்வுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த இடம் எனக் குறிப்பிடுகிறது. 10கி.மீ. தூரத்துக்கு சுரங்கம் அமைக்க கடினமான மலைகளை வெடிவைத்துத் தகர்க்க வேண்டியிருக்கும். இது அப்பகுதியில் தீவிரமான நில அதிர்வை ஏற்படுத்தக்கூடும்.

மாதவ் காட்கில்
மாதவ் காட்கில்

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சமர்ப்பித்த விண்னப்பத்தில் இது தொடர்பான அறிவியல் ஆய்வுகள் எதுவும் இடம்பெறவில்லை. குறிப்பாகச் சுரங்கம் அமைக்கும் இடத்தின் புவியியல் நிலைத்தன்மை, சுரங்கப் பணிகளால் அப்பகுதியில் ஏற்படும் நீரியல் பாதிப்புகள், நில அதிர்வின் தாக்கம், உயிர்ப்பன்மையத்தின் மீது ஏற்படுத்தும் பாதிப்புகள், நிலச்சரிவு அபாயம் உள்ளிட்டவை குறித்த ஆய்வுகள் எதுவும் வனத்துறையிடம் சமர்ப்பிக்கப்படவில்லை

இத்திட்டத்திற்கான 23,500 மரங்கள் வெட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி உள்ளிட்ட பல்வேறு ஆறுகளின் பிறப்பிடமாக உள்ள பகுதியில் இத்தனை மரங்களை வெட்டுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மாதவ் காட்கில் போன்ற அறிஞர்களின் எச்சரிக்கைகளைப் கண்டுகொள்ளாத காரணத்தால் ஒவ்வொரு பருவமழைக் காலங்களின் போதும் கேரளாவில் நிலச்சரிவு ஏற்படுவதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இவற்றை மனதில் கொண்டு காடுகளுக்கும் கானுயிர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவல்ல தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் இத்திட்டத்திற்குத் தமிழ் நாடு அரசு வனத்துறை அனுமதி வழங்கக் கூடாதெனக் கோருகிறோம்.” எனத் தெரிவித்தார்.

Source link