டிமான்டி காலனி 2 படத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு திரையரங்கில் அருள்நிதி நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘அருள்வான்’. இந்த முறை பழங்குடியின மக்கள் படும் அவலங்களை பேசும் படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா, இல்லையா?
தேனி மாவட்டத்தில் இருக்கும் மலை கிராமத்தில் காடர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சரியான சாலை வசதி கூட இல்லாமல் மிகவும் பின் தங்கிய இடத்தில் மின்சாரம் கூட இல்லாமல் வசிக்கும் இந்த மக்கள் காட்டில் கிடைப்பதை வைத்துக்கொண்டு வாழ்ந்தாலே போதும் என்ற மனோபாவத்தில் இருக்கின்றனர். இதனால் அங்கு இருக்கும் பெண்கள் பூப்படைந்த உடனேயே திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இந்த வழக்கம் இப்படி இருக்க ஆரவ் – ரம்யா பாண்டியன் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
கிருத்திகா என்ற பெண் குழந்தை வளர்ந்து பூப்படையும் வயது வரும் பொழுது அவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கின்றனர். அந்த சிறுமிக்கோ எப்படியாவது பள்ளிக்கு சென்று படித்து இந்த கிராமத்தை முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இதனால் யாருக்கும் தெரியாமல் அந்த ஊருக்கு பள்ளி கொண்டு வரவும் அந்தப் பள்ளியில் எப்படியாவது தன் மக்கள் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் மலையை விட்டு தனியாக கீழே இறங்கி தேனி கலெக்டர் அருள் நிதியை சந்திக்க சென்று விடுகிறார். இதனால் அந்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து சிறுமியை தேடுகின்றனர். சிறுமி கிருத்திகா கலெக்டர் அருள் நிதியை சந்தித்தாரா, இல்லையா? அவர் ஊருக்கு பள்ளி வந்ததா, இல்லையா? அந்த சிறுமி தான் நினைத்த படி பள்ளியில் சேர்ந்து படித்தாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
பெண் கல்வி, பெண்களின் முன்னேற்றம், பெண்களுக்கான சுதந்திரம், பின் தங்கிய வகுப்பை சார்ந்தவர்களுக்கான உரிமை என சமூக அக்கறையோடு படத்தை இயக்கியிருக்கிறார் தேன் பட இயக்குநர் கணேஷ் விநாயக். இவர் இயக்கிய முந்தைய படத்திலும் சமூகத்திற்கு மிக முக்கியமான ஒரு கருத்தை கூறிய அவர் இந்த படத்திலும் பெண் கல்வியை வலியுறுத்தி இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். முதல் பாதி முழுவதும் அந்த கிராம மக்கள் அதில் நடக்கும் சடங்கு சம்பிரதாயங்கள் அவர்களின் வாழ்வியல் என நகரும் திரைப்படம் இரண்டாம் பாதியில் இருந்து வேகம் எடுத்து சமூகத்துக்கு தேவையான கருத்தை முன்னிறுத்தி கலெக்டர், பள்ளி என அடுத்தடுத்து காட்சிகள் விறுவிறுப்பாகவும் வேகமாகவும் நடந்து இறுதி கட்டத்தில் கலங்கடிக்கும் படியாக முடிந்து நிறைவு பெறுகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/07/18/05-2026-07-18-16-00-08.jpg)
இரண்டாம் பாதியில் திரைக்கதை வேகமும் கதைக்கான அக்கறையும் முதல் பாதியில் இல்லாததால் படத்தில் சற்று அயர்ச்சி ஏற்படுகிறது. படத்தின் கதையில் சொல்ல வந்த படிப்பு மிகவும் முக்கியம் என்ற கருத்தை விட்டுவிட்டு கிராம மக்களின் வாழ்வியலை மட்டும் முதல் பாதி முழுவதும் விரிவாக அதே சமயம் மூடநம்பிக்கைகளும் அதிகமாக காண்பித்திருப்பது படத்திற்கு பாதகமாக அமைந்திருக்கிறது. இரண்டாம் பாதியில் இருந்த விறுவிறுப்பும் திரைக்கதை வேகமும் முதல் பாதியில் இருந்தே இருந்திருந்தால் இந்த திரைப்படம் மிகவும் சிறப்பு வாய்ந்த திரைப்படமாக மாறி இருக்கும். தான் சொல்ல வந்த விஷயத்தை இரண்டாம் பாதியில் சிறப்பான முறையில் கூறிய இயக்குநருக்கு பாராட்டுக்கள். சமூகத்துக்கு மிக அவசியமான ஒரு திரைப்படமாக இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.
நாயகன் அருள்நிதி கலெக்டர் கதாபாத்திரத்தில் மிளிர்கிறார். தனக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். படத்தின் நாயகன் என்று பார்த்தால் சிறுமி கிருத்திகா தான். இவரின் சிறப்பான நடிப்பு அந்த கதாபாத்திரத்துடன் நம்மை ஒன்ற வைத்து பார்ப்பவர்களை பல இடங்களில் கண்கலங்க வைத்திருக்கிறது. ஒவ்வொரு காட்சிக்கு ஏற்றார் போல் நடை உடை பாவனை வசன உச்சரிப்பு என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். இந்த சிறுமிக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. நாயகன் ஆரவ் தனக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்து இருக்கிறார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/07/18/07-2026-07-18-16-00-21.jpg)
நாயகி ரம்யா பாண்டியனுக்கு படத்தில் பெரிதாக வேலை இல்லை. கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரும் காளி வெங்கட் சிறப்பான பங்களிப்பு கொடுத்திருக்கிறார். வழக்கமான வில்லத்தனம் காட்டும் ஜான் விஜய் வழக்கமான முறையிலேயே அதை செய்து விட்டு சென்று இருக்கிறார். மற்றபடி படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுமே அவரவர் வேலையை நிறைவாக செய்துவிட்டு சென்றிருக்கின்றனர்.
சுகுமார் ஒளிப்பதிவில் வழக்கம் போல் மழை மற்றும் அதை சார்ந்த காட்சிகள் மிக மிக சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாதிரியான திரைப்படங்களுக்கு கை தேர்ந்தவர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் ஓகே பின்னணி இசை சிறப்பு. படத்தில் சொல்லப்பட்ட கருத்து ஏற்கனவே பல படங்களில் பல தடவை வந்திருக்கின்றன. ஆனால் அதில் திரைக்கதையில் சுவாரசியம் கூட்டி பலர் வெற்றியடைந்திருக்கின்றனர். அதுபோல் இந்த படத்தையும் இயக்குநர் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பான படமாக அமைந்திருக்கும்.
அருள்வான் – கல்வி முக்கியம்!
