சென்னை: திராவிட மாடல்’ என்று கூறி ஆட்சி நடத்திய திமுகவைப் போலவே, விலை மதிப்பற்ற உயிருக்கு விலை வைக்கும் துஷ்ட சக்தி தவெக என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை;
தமிழகத்தையே தலைகீழாகப் புரட்டிவிடுவோம் என்று கூறி, கடந்த 5 ஆண்டுகள் ஆட்சி நடத்திய நிர்வாகத் திறனற்ற திமுக அரசுக்கு முடிவுரை எழுதப்பட்டுவிட்டது என்று பெருமூச்சு விட்ட மக்களுக்கு, அதிர்ச்சி அளிக்கும் வகையில், அதன் தொடர்ச்சியாக ‘நாங்கள் இருக்கிறோம்’ என்று தற்போதைய தவெக ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருவது வேதனை அளிக்கிறது.
கடந்த திமுக ஆட்சியில் ‘கோவில் காவலாளி அஜித்குமார்’ முதல் சென்னை தலைமைச் செயலக காலனி போலீசாரால் ‘விக்னேஷ்’, தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று, பல சந்தர்ப்பங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் அடித்தும், என்கவுண்டர் என்ற பெயரிலும் கொல்லப்பட்டுள்ளனர்.
முக்கியமான குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒருசில பெருந்தலைகளைக் காப்பாற்ற இதுபோன்ற நடவடிக்கைகள் அன்றைய அரசால் எடுக்கப்பட்டன என்று பொதுமக்களிடம் இருந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
‘மாற்றம் கொண்டு வருவோம்’ என்று சொல்லி ஆட்சி அமைத்த இந்த தவெக அரசில், அடாவடித்தனங்கள் நிகழாது என்று மக்கள் நம்பினார்கள். ‘மழைவிட்டும் தூவானம் விடவில்லை’ என்பதுபோல், கொடுங்கோல் ஆட்சியாளர்களிடமிருந்து மக்கள் விடுபட்டிருந்தாலும், ‘துஷ்ட சக்தி’ ஆட்சியாளர்களின் கையில் சிக்கித் தவிக்கிறார்கள். ‘யானையின் பிடியிலிருந்து தப்பி, முதலையின் வாய்க்குள் விழுந்தது போல்’ அப்பாவி மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் நாகர்கோவில் சிறையில் மாற்றுத் திறனாளி கைதி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். அவரை சிறைக் காவலர்கள் கொடுமைப்படுத்தி சாகடித்தார்கள் என்று அவரது குடும்பத்தினர், உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
அமைச்சர்கள் தருவதாகச் சொன்ன நிவாரண நிதியையும், உதவியையும் பெற பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் மறுத்ததாகச் செய்திகள் வருகின்றன. புழல் சிறையிலும் விசாரணைக் கைதி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. அவரது உறவினர்களும் நீதி கேட்டுப் போராடி வருகின்றனர். அவர்களுக்கும் இந்த ஆட்சியாளர்கள் விலைபேசி வருகிறார்கள்.
விலை மதிப்பற்ற உயிர்களுக்கு உயிரே உன் விலை என்ன என்று கேட்டு, பணத்தை வாரி இறைத்து, அப்பாவிகளின் வாயை அடைத்துவிடலாம் என்ற மமதை எண்ணம், ஆட்சிக்கு வந்த 60 நாட்களுக்குள்ளேயே ஒரு முதல்வருக்கு வந்துள்ளது என்பது மக்கள் மனதில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு இபிஎஸ் கூறி உள்ளார்.
