புதுடில்லி; டில்லியில் அஹிம்சை வழியில் போராடிய சோனம் வாங்சுக்கை ஜந்தர் மந்தரில் இருந்து அகற்றியது தவறு என்று காங்கிரஸ் எம்பி ராகுல் கண்டித்துள்ளார்.
தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி காக்ரோச் ஜனதா கட்சி என்ற அமைப்பு போராட்டத்தில் குதித்து உள்ளது. ஜூன் 20ம் தேதி தலைநகர் டில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடந்து வருகிறது.
பிரபல கல்வியாளரும், பருவநிலை ஆர்வலருமான சோனம் வாங்சுக் ஜூன் 28 முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். டில்லி போலீசார் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் வெளியிட்டு உள்ள பதிவு;
அஹிம்சை வழியில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு இருந்த சோனம் வாங்சுக்கை ஜந்தர் மந்தர் பகுதியில் இருந்து அகற்றியது தவறு. பிரதமர் மோடி அரசின் அடிப்படை கொள்கையே பொய்யும், வன்முறையும் தான்.
எந்த அடக்குமுறையும், மாணவர்களையும் அவர்களுக்காக குரல் கொடுப்பவர்களையும் தடுத்து விட முடியாது.
இவ்வாறு ராகுல் கூறி உள்ளார்.
