விஜய் வருகையால் விடுதிக்கு வந்தது விமோசனம்; மீண்டும் கிடைக்குது இட்லி, தோசை, சப்பாத்தி

சென்னை: சென்னையில் செயல்படும் எம்.சி.ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில், முதல்வர் விஜய், திடீர் ஆய்வு செய்ததை தொடர்ந்து, சிலிண்டர் தட்டுப்பாட்டால் நிறுத்தப்பட்டிருந்த இட்லி, தோசை, சப்பாத்தி உள்ளிட்ட உணவுகள் மீண்டும் வழங்கப்படுகின்றன.

சென்னை சைதாப்பேட்டையில், ஆதிதிராவிடர் நலத் துறைக்கு சொந்தமான எம்.சி.ராஜா சமூக நீதி மாணவர் விடுதி உள்ளது. 44.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, இந்த விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததுடன், தரமற்ற உணவு வழங்கப்படுவதாக, மாணவர்கள் தொடர் புகார்களை முன்வைத்து வந்தனர்.

இந்நிலையில், முதல்வர் விஜய் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, எம்.சி.ராஜா விடுதியில் திடீர் ஆய்வு செய்தார். அங்குள்ள மாணவர்களிடம் குறைகளை கேட்டார்.அப்போது, உணவில் புழு, பூச்சி இருப்பதுடன், தரமற்ற உணவு வழங்கப்படுவதாக, மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும், இரவு வேலைக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், இரவு தாமதமாக விடுதிக்கு வந்தால், அவர்களுக்கு, உணவு வழங்க மறுப்பதாகவும், குறிப்பிட்ட நேரத்துக்கு பின் விடுதிக்குள் அனுமதிக்க மறுப்பதாகவும், மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதுகுறித்து, விடுதி காப்பாளரிடம், முதல்வர் விளக்கம் கேட்டதுடன், புகார்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். இதற்கிடையில், சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, சில மாதங்களாக, இரு வேளை உப்புமா, ஒரு வேளை கலவை சாதம் மட்டுமே, விடுதிகளில் உணவாக வழங்கப்பட்டு வருகின்றன.

முதல்வரின் ஆய்வுக்குப் பின், பழையபடி இட்லி, தோசை, சப்பாத்தி உள்ளிட்ட உணவுகள் மீண்டும் வழங்கப்படுகின்றன. மேலும், இரவு 12:00 மணி வரை, மாணவர்கள் விடுதிக்குள் அனுமதிக்கப்படும் வகையில், விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.விடுதி நுாலகத்திற்கு போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் வாங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Source link