புதுடில்லி: உத்தவ் தாக்கரே அணியில் வெற்றி பெற்ற 6 எம்பி.,க்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்ததை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா; அங்கீகரித்துள்ளார்.
சிவசேனாவின் உத்தவ் தாக்கரே 2022ம் ஆண்டில் 2 ஆக உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பிரிந்து சென்று பாஜவுக்கு ஆதரவு அளித்தனர். அதன் எதிரொலியாக சிவசேனாவை ஷிண்டே கைப்பற்ற, உத்தவ் தாக்கரே தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
உத்தவ் தரப்பு சிவசேனாவுக்கு 20 எம்எல்ஏக்களும், 9 லோக்சபா எம்பிக்களும் உள்ளனர். அவர்களில் சஞ்சய் உத்தம்ராவ் தேஷ்முக், நாகேஷ் பாபுராவ் படேல் உள்ளிட்ட 6 எம்பிக்கள் உத்தவுக்கு எதிராக திரண்டனர். அங்கிருந்து விலகி, ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைய போவதாக லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கடிதம் அளித்து இருந்தனர்.
இந் நிலையில் உத்தவ் அணியின் 6 எம்பிக்களும் ஷிண்டே அணியில் இணைந்ததை சபாநாயகர் ஓம் பிர்லா அங்கீகரித்து உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது லோக்சபா செயலகம் மூலமாக வெளியிடப்பட்டு உள்ளது. அதன் படி, சிவசேனா பலம் என்பது தற்போது லோக்சபாவில் 7 என்பதில் இருந்து 13 ஆக உயர்ந்துள்ளது.
அதே தருணத்தில் உத்தவ் அணியின் எம்பிக்கள் பலம் 3 ஆக குறைந்திருக்கிறது. சபாநாயகரின் அங்கீகாரம், உத்தவ் அணிக்கு பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது. முன்னதாக, தமது அணிக்கு வந்த 6 எம்பிக்களும் சட்ட வல்லுநர்கள் ஆலோசனையின் பேரில், அனைத்து சட்ட நடைமுறைகளையும் சபாநாயகரிடம் சமர்ப்பித்து இருந்தனர் என்று ஏக்நாத் ஷிண்டே கூறியிருந்தது, குறிப்பிடத்தக்கது.
மம்தாவுக்கும் சிக்கல்
இதே போல மம்தா கட்சி லோக்சபா எம்பிக்கள் 20 பேர், அந்தக் கட்சியில் இருந்து விலகி தனி குழுவாக செயல்பட விருப்பம் தெரிவித்திருந்தனர். அதன்படி அவர்களை தனி குழுவாக அங்கீகரித்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
