ஊராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு ராஜா, ராணி பட்டம்!

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சி. கொத்தங்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியரின் முயற்சியால் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில், முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பள்ளியின் வளர்ச்சிக்காக பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள இந்த பள்ளியில், கடந்த ஓராண்டுக்கு முன்பு தனியார் பள்ளிகளின் ஆங்கில வழி மோகத்தால் 7 பேர் மட்டுமே கல்வி பயின்று வந்தனர். அப்போது தலைமை ஆசிரியராக ஈஸ்வரி பொறுப்பேற்றார். அவர் வீடு வீடாகச் சென்று, அரசு பள்ளியின் சிறப்புகள், கல்வித் தரம் மற்றும் அரசின் சலுகைகள் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதன் பலனாக தற்போது 7 மாணவர்கள் மற்றும் 11 மாணவிகள் என மொத்தம் 18 பேர், தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வியில் பயின்று வருகின்றனர். மேலும், ஒரு ஆசிரியர் பள்ளியாக இருந்த இப்பள்ளி தற்போது 2 ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளியாக உயர்ந்துள்ளது. தலைமை ஆசிரியரின் முயற்சியை பாராட்டும் வகையில், அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீரமணி–இளமதி தம்பதியினர் பள்ளி மாணவர்களின் கல்விக்காக ஸ்மார்ட் டிவி வழங்கியுள்ளர். அதேபோல், பள்ளியின் முன்னாள் மாணவர் திருமுருகன் வகுப்பறை மற்றும் வராண்டாவில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக புதிய டைல்ஸ் அமைத்து கொடுத்துள்ளார். முன்னாள் மாணவர் விக்ரமன் மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடுகளை செய்துள்ளார். மேலும், முன்னாள் மாணவர்கள் தினேஷ், சரண்ராஜ் உள்ளிட்டவர்கள் பள்ளியின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் பெற்றோர்களை நேரில் சந்தித்து அரசு பள்ளியின் கல்வித் தரம் குறித்து எடுத்துரைத்து தலைமை ஆசிரியருக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பரங்கிப்பேட்டை ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் அறிவழகன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கவிதை, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், கொத்தங்குடி கிராமத்தின் ராணி, ராஜா என பட்டங்கள் வழங்கி ‘கல்வியால் மட்டுமே ஒருவர் எந்த நிலையிலிருந்தாலும் முன்னேற முடியும்’ என்ற கருத்தை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஈஸ்வரி, மற்றும் ஆசிரியை ஜெயலட்சுமி செய்திருந்தனர். இதில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பள்ளியின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் ஆசிரியர்களையும் முன்னாள் மாணவர்களை பாராட்டினர்.

Source link