தமிழ் சினிமாவில் அறிமுகம், உலகளவில் முன்னணி நடிகை; ஒரு படத்திற்கு ரூ30 கோடி சம்பளம்: பிரியங்கா சொத்து மதிப்பு தெரியுமா?

தமிழன் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமாகி தற்போது உலக சினிமாவின் முன்னணி நடிகையாக மாறியுள்ள பிரியங்கா சோப்ரா இன்று (ஜூலை 18) தனது 43-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை வெற்றிகரமான ஒரு பயணத்தை மேற்கொண்ட பிரியங்கா, ஒரு நடிகை என்பதைத் தாண்டி தொழிலதிபர், தயாரிப்பாளர், பிராண்ட் அம்பாசிடர் என தனக்கென ஒரு சொந்த சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார்.

‘கோய்மாய்’ (Koimoi) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பிரியங்கா சோப்ராவின் தனிப்பட்ட சொத்து மதிப்பு சுமார் ரூ583 கோடியாகும். அவரது கணவரும் பாடகருமான நிக் ஜோனஸின் சொத்து மதிப்பு சுமார் ரூ666 கோடி என்று அந்த அறிக்கை கூறுகிறது. இவர்கள் இருவரின் கூட்டு சொத்து மதிப்பு சுமார் ரூ1,250 கோடி வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான பிரியங்கா, மகேஷ் பாபுவுடன் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கும் புதிய திரைப்படத்திற்காக சுமார் ரூ30 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சர்வதேச உளவுத் தொடரான ‘சிட்டடெல்’ (Citadel) தொடரில் நடித்ததற்காக அவருக்கு சுமார் ரூ41 கோடி சம்பளம் கிடைத்ததாகவும், கதாநாயகனுக்கு இணையான சம்பளம் அவருக்கு வழங்கப்பட்டதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. திரைப்படங்கள் தவிர, சர்வதேச ஓடிடி (Streaming) திட்டங்கள் மூலமும் பிரியங்கா பெருமளவில் வருவாய் ஈட்டுகிறார். மேலும், ‘பர்பிள் பெபிள் பிக்சர்ஸ்’ (Purple Pebble Pictures) என்ற அவரது தயாரிப்பு நிறுவனமும் அவரது முக்கிய வருமான ஆதாரங்களில் ஒன்றாகும்.

பிராண்ட் விளம்பரங்களிலும் பிரியங்கா முன்னணியில் உள்ளார். உலகளாவிய பிராண்ட் அம்பாசிடரான அவர், ஒரு விளம்பர ஒப்பந்தத்திற்கு சுமார் ரூ5 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ‘அனோமலி’ (Anomaly) என்ற கூந்தல் பராமரிப்பு பிராண்டின் நிறுவனரான பிரியங்கா, தொழில்நுட்பம் மற்றும் லைஃப்ஸ்டைல் துறைகளில் உள்ள பல ஸ்டார்ட்-அப்களிலும் முதலீடு செய்துள்ளார்.

சொகுசு வாழ்க்கை முறையிலும் இந்த நட்சத்திர தம்பதியினர் பெயர் பெற்றவர்கள். 2019-ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸில் சுமார் ரூ171 கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களாவை அவர்கள் வாங்கியது பெரும் செய்தியானது. இது தவிர, மும்பை மற்றும் கோவாவிலும் பிரியங்காவிற்கு மதிப்புமிக்க சொத்துக்கள் உள்ளன. சொகுசு கார்களின் பெரிய சேகரிப்பும் இவரிடம் உள்ளது.

இதற்கிடையில், பிரியங்கா இந்திய சினிமாவிற்கு மீண்டும் திரும்புவதை காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கும் ‘வாரணாசி’ என்ற திரைப்படத்தின் மூலம் அவர் மீண்டும் இந்திய சினிமாவில் தடம் பதிக்கிறார். பிரியங்காவின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தின் புதிய போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Source link