இதயமெல்லாம் மெஸ்ஸி… மனசெல்லாம் ஸ்பெயின்

புதுடில்லி: ”என் இதயம் மெஸ்ஸிக்கு ஆதரவு அளிக்கிறது. மனமோ ஸ்பெயின் பக்கம் செல்கிறது,” என இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் காலித் ஜமில் தெரிவித்தார்.

அமெரிக்காவின் நியூஜெர்சியில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து பைனலில் அர்ஜென்டினா, ஸ்பெயின் மோத உள்ளன. இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால், சாம்பியனை கணிப்பது கடினமாக உள்ளது.

முடிவு மாறுமா: இந்திய பயிற்சியாளர் காலித் ஜமில் கூறுகையில்,”எனது குடும்பத்தினர் அர்ஜென்டினாவுக்கு ஆதரவு அளிக்கின்றனர். எனக்கும் இந்த அணி கேப்டன் மெஸ்ஸியை பிடிக்கும். இவரது ஆட்டம் எனது இதயத்தை கவர்ந்துள்ளது. இருப்பினும் ஸ்பெயின் அணி நல்ல ‘பார்மில்’ உள்ளது. தற்போதைய உலக கோப்பை தொடரில் ஒரு கோல் மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளது. மத்திய களத்தில் வலுவான வீரர்கள் உள்ளனர். முன்களத்தில் யமால் அசத்துகிறார். என் மனம் இவர்கள் பக்கம் செல்கிறது. துவக்கத்தில் ஸ்பெயின் கோல் அடித்தால், போட்டி அவர்கள் வசம் சென்றுவிடும். 70 நிமிடம் வரை ஸ்பெயினை அர்ஜென்டினா கோல் அடிக்காமல் தடுத்துவிட்டால், முடிவு வேறுவிதமாக இருக்கும். ஏனெனில் கடைசி கட்டத்தில் ‘கம்பேக்’ கொடுப்பதில் அர்ஜென்டினா அணியினர் வல்லவர்கள்,”என்றார்.

யார் ஆதிக்கம்: இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுர்மாங்கி சிங் கூறுகையில்,”இரு அணிகளுமே சிறப்பாக செயல்படுகின்றன. வெற்றி வித்தியாசம் குறைவாக இருக்கும். ஸ்பெயின் அணியின் தற்காப்பு வலுவாக உள்ளது. கோல்கீப்பர் சைமன் தவிர மற்ற வீரர்களும் அரணாக செயல்படுகின்றனர். எதிரணிக்கு பந்தை தட்டிச் செல்ல வாய்ப்பு கொடுப்பதில்லை. முன்கள வீரர்களும் அசத்துகின்றனர்.

அர்ஜென்டினா அணி ‘நடப்பு சாம்பியன்’ என்பதற்கு ஏற்ப ஆதிக்கம் செலுத்துகிறது. போட்டியின் எந்த கட்டத்திலும் பதட்டம் அடைவதில்லை. மெஸ்ஸியை தவிர, போட்டியின் போக்கை மாற்றக்கூடிய நிறைய வீரர்கள் உள்ளனர். எந்த நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை அறிந்தவர்கள். வாய்ப்புகளை வீணாக்குவதில்லை. பைனலை மெஸ்ஸி, ஸ்பெயினின் யமால் இடையிலான போட்டியாக கருத முடியாது. இரு திறமையான அணிகள் மோதும் போட்டியாக தான் பார்க்க வேண்டும். 20 ஆண்டுகளாக விளையாடும் மெஸ்ஸி மகத்தான வீரராக திகழ்கிறார். எதிர்கால நட்சத்திரமாக யமால் உள்ளார்,”என்றார்.

தற்காப்பு பகுதி பலம்: இந்திய கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சாந்து கூறுகையில்,”அர்ஜென்டினாவின் கோல்கீப்பர் எமிலியானோ மார்டினசிற்கு அனுபவம் சாதகம். மனதளவில் வலிமையானவர். எந்த சமயத்திலும் அவசரப்படமாட்டார். ஸ்பெயின் கோல்கீப்பர் சைமனுக்கு வலுவான தற்காப்பு பகுதி வீரர்கள் பக்கபலமாக உள்ளனர். இதனால் பாதுகாப்பாக உணர்கிறார். அர்ஜென்டினாவின் தற்காப்பு பகுதி பலவீனமாக உள்ளது. போட்டியின் கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது,”என்றார்.

Source link