டோக்கியோ: ஜப்பான் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு இந்திய வீராங்கனை சிந்து முன்னேறினார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ‘சூப்பர் 750’ அந்தஸ்து பெற்ற ஜப்பான் ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலகின் ‘நம்பர்-10’ இந்தியாவின் சிந்து 31, டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் கைப்பற்றிய, உலகின் ‘நம்பர்-4’ சீனாவின் சென் யுபெய் 28, மோதினர்.
முதல் செட்டை 21-19 எனக் கைப்பற்றிய சிந்து, இரண்டாவது செட்டில் 15-10 என முன்னிலையில் இருந்த போது, காயத்தால் சீன வீராங்கனை பாதியில் விலகினார். இதனையடுத்து சிந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, பைனலுக்கு தகுதி பெற்றார்.
பைனலில் சிந்து, உலகின் ‘நம்பர்-3’ ஜப்பானின் அகானே யமாகுச்சியை சந்திக்கிறார். இருவரும் 24 முறை மோதினர். இதில் சிந்து 10, யமாகுச்சி 14ல் வெற்றி பெற்றனர்.
சர்வதேச அரங்கில், இரண்டு ஆண்டுகளுக்கு பின் பைனலுக்கு முன்னேறினார் சிந்து. கடைசியாக 2024ல் லக்னோவில் நடந்த சையது மோடி பாட்மின்டனில் பைனலுக்குள் நுழைந்த இவர், சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
