நடிகர் விஜய் வெற்றியால் அதிரும் ஆந்திரா: அரசியலில் களம் இறங்குகிறார் என்.டி.ஆர்., பேரன்

– நமது சிறப்பு நிருபர் -:

ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாணை தொடர்ந்து, முன்னாள் முதல்வர் என்.டி.ராம ராவின் பேரனும், நடிகருமான ஜூனியர் என்.டி.ஆர்., அரசியலில் குதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். சந்தித்த முதல் தேர்தலிலேயே, தி.மு.க., – அ.தி.மு.க., போன்ற திராவிட கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு அவர் முதல்வராகி இருப்பது, தேசிய அளவில் பேசுபொருளானது.

குறிப்பாக, அண்டை மாநிலமான ஆந்திராவில், ஆளும் தெலுங்கு தேசம் – பா.ஜ., கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள ஜன சேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண், தொண்டர்கள் மத்தியில் விஜயின் வெற்றி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் விஜய் போலவே, பவன் கல்யாணும் மக்களின் அமோக ஆதரவு பெற்று, அடுத்த முறை முதல்வராக வேண்டும் என்ற குரல்கள் அங்கே ஒலிக்க ஆரம்பித்து இருக்கின்றன.

இதன் காரணமாக, பா.ஜ., துணையுடன், தெலுங்கு பேசும் மற்றொரு மாநிலமான தெலுங்கானா அரசியலிலும் பவன் கல்யாண் தீவிரமாக களம் இறங்கி இருக்கிறார். இதனால், இரு மாநில அரசியல் களத்திலும் அனல் பறக்கிறது.

இந்த சூழலில், தெலுங்கு தேச கட்சியின் நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்வருமான என்.டி.ராம ராவின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர்., ஆந்திர அரசியலில் களம் இறங்க உள்ளார்.

தெலுங்கில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜூனியர் என்.டி.ஆர்., ஓரிரு வாரங்களுக்குள் தன்னார்வ தொண்டு அமைப்பை ஆரம்பிக்கவுள்ளார்; இதன் மூலம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சமூகப் பணிகளில் ஈடுபட உள்ளார்.

திரைப்படங்கள் வாயிலாக அதிக ரசிகர்களை ஈர்த்துள்ள ஜூனியர் என்.டி.ஆர்., தமிழகத்தில் த.வெ.க., கட்சி தொடங்கி, தேர்தலை சந்தித்து, ஆட்சியை பிடித்தது வரை, முதல்வர் விஜயின் அனைத்து நகர்வுகளையும் உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது.

அதன் ஒரு கட்டமாக தொண்டு நிறுவனம் தொடங்கி, பின்னாளில் அதை அரசியல் கட்சியாக மாற்றி, தமிழக முதல்வர் விஜய் போலவே அரசியலில் வலுவாக கால் பதிக்கவும், அவர் காய்களை நகர்த்தி வருவதாக பேசப்படுகிறது.

தற்போது ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நிர்வாகத்தில், ஆந்திர மக்கள் மற்றும் கட்சிக்குள் இருக்கும் சில முக்கிய தலைவர்களுக்கு அதிருப்தி நிலவுகிறது. இந்த சமயத்தில், ஜூனியர் என்.டி.ஆர்., அரசியலில் நுழைய உள்ளதாக அடிபடும் பேச்சுகள், ஆந்திராவில் உள்ள முக்கியமான அரசியல் கட்சியினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளன.

அரசியலுக்கு புதுமுகமல்ல ஜூனியர் என்.டி.ஆர்., அரசியலுக்கு புதுமுகம் அல்ல. 2009ம் ஆண்டில், தெலுங்கு தேசம் வெற்றிக்காக தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஒரு கட்டத்தில் தெலுங்கு தேசம் தலைவரும், தற்போதைய முதல்வருமான சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷுக்கு போட்டியாக வந்துவிடக் கூடாது என்பதற்காக, அரசியலில் இருந்து ஜூனியர் என்.டி.ஆர்., மெல்ல விலகினார். இவரது தந்தை ஹரி கிருஷ்ணா, கர்நாடகாவைச் சேர்ந்த பிராமண பெண்ணை மணந்ததால், தாத்தா என்.டி.ராம ராவ், குடும்பத்தை விட்டே அவரை ஒதுக்கி வைத்தார்; பின்னாளில் சமாதானமாகி சேர்த்துக் கொண்டார். என்.டி.ராம ராவின் மற்றொரு மகனான பாலகிருஷ்ணாவும் நீண்ட காலமாக அரசியலில் இருக்கிறார். ஆனால், இதுவரை தன் தந்தையின் அரசியல் வாரிசாக தன்னை அவர் முன்னிறுத்தி கொண்டதில்லை.

Source link