டிமேட் கணக்கில் மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்களுக்கு புதிய சலுகை

மியூச்சுவல் பண்டுகளில் டிமேட் கணக்கு வாயிலாக முதலீடு செய்தவர்கள், இனி தங்களின் பணத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாகவே எடுப்பதற்கும் (எஸ்.டபிள்யூ.பி.,), வேறு திட்டங்களுக்கு மாற்றுவதற்கும் (எஸ்.டி.பி.,) செபி அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது, மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் வாயிலாக நேரடியாக முதலீடு செய்தவர்களுக்கு மட்டுமே இந்த தானியங்கி வசதி உள்ளது. டிமேட் கணக்கில் யூனிட்களை வைத்திருப்பவர்கள், ஒவ்வொரு முறையும் பணத்தை எடுக்கவோ அல்லது வேறு திட்டத்திற்கு மாற்றவோ தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. இனி, நிலையான கோரிக்கை வாயிலாக இதை மேற்கொள்ளலாம்.

இந்த புதிய நடைமுறை இரண்டு கட்டங்களாக அமல்படுத்தப்பட உள்ளது.

முதல் கட்டத்தில், முதலீட்டாளர்கள் தங்களின் பண்டு யூனிட்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாகவே பணம் எடுக்கவோ அல்லது அதே நிறுவனத்தின் வேறு திட்டத்திற்கு மாற்றவோ செய்யலாம். இந்த வசதி 2027 ஜனவரி 31க்குள் நடைமுறைக்கு வரும்.

இரண்டாம் கட்டத்தில், குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் அல்லது நிர்ணயிக்கப்பட்ட கால இடைவெளியில் தானாகவே எடுக்கவோ அல்லது வேறு திட்டத்திற்கு மாற்றவோ முடியும். இந்த வசதி 2027 ஏப்ரல் 30க்குள் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.

இதற்கான செயல்பாட்டு நெறிமுறைகளை 2026 அக்டோபர் 31க்குள் தயாரித்து வெளியிட டிபாசிட்டரிகளுக்கு செபி உத்தரவிட்டுள்ளது.

Source link