திருப்பூர்: திருப்பூர் அருகே காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த மேலும் 4 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி குமார் (38), அவரது சகோதரர் விஜய் (31), இவரது மனைவி தேன்மொழி (21) மற்றும் உறவினர் இலக்கியா, இவரது மகள் சுபஸ்ரீ, உறவினரான அய்யப்பன், இவரது மனைவி காவியா என மொத்தம் 7 பேர் காரில் திருத்தணியில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்டனர்.
காரை திருத்தணியைச் சேர்ந்த ராஜ்குமார் (30) என்பவர் ஓட்டினார். இவர்களது வாகனம் சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில், திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் சென்றபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த, காஸ் சிலிண்டர் பாரம் ஏற்றிய லாரியின் பின்னால் மோதியது.
இந்த விபத்தில் காரில் இருந்த குமார், விஜய், தேன்மொழி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த இலக்கியா, சுபஸ்ரீ, அய்யப்பன், காவியா, ராஜ்குமார் ஆகிய 5 பேரையும் அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு திருப்பூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்த்தனர். விபத்து குறித்து ஊத்துக்குளி போலீஸார் வழக்குப் பதிந்து லாரியை ஓட்டிச் சென்ற கோவையைச் சேர்ந்த அன்பழகனை விசாரித்து வருகின்றனர்.
