சென்னை: த.வெ.க., ஆட்சியை கவிழ்க்க முயற்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து, 2.80 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி த.வெ.க., – எம்.எல்.ஏ., இளையராஜாவுக்கு, 35 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசியது தொடர்பாக, சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
விசாரணையில், சென்னையைச் சேர்ந்த திருநாவுக்கரசு உட்பட, 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களின் பின்னணியில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணை மற்றும் மொபைல் போன்கள் தரவுகள் அடிப்படையில், கொரட்டூரைச் சேர்ந்த கருணாநிதி, சாலிகிராமத்தை சேர்ந்த சரவணன், பள்ளிக்கரணையைச் சேர்ந்த வினோத் வெங்கடேசன் ஆகியோரிடம், திருவல்லிக்கேணி போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, சூளைமேட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 2.80 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, நிதி நிறுவன உரிமையாளர் கருணாநிதி மற்றும் சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை, 14 ஆக அதிகரித்துள்ளது.
இந்த சதி திட்டத்தில், மூளையாகச் செயல்பட்ட நரேஷ் என்பவருடன், இருவரும் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட பணம் ஹவாலா பணமா எனவும் விசாரிக்கின்றனர்.
