ரூ.4 கோடி பறிக்க முயன்ற வழக்கு: பஞ்சாப் போலீஸ் அதிகாரிக்கு 'காப்பு'

சண்டிகர்: இந்தியாவில் உள்ள தங்களது உறவினர்களை கொலை வழக்கில் சிக்க வைத்து விடுவேன் என மிரட்டி, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய குடும்பத்தினரிடம், நான்கு கோடி ரூபாய் பறிக்க முயன்ற வழக்கில், பஞ்சாப் போலீஸ் அதிகாரி குரிந்தர்ஜித் சிங் நாக்ரா கைது செய்யப்பட்டார்.

போதை பொருள் கடத்தல், ஆள்கடத்தல் போன்ற குற்றங்களுக்கு எதிராக, கனடா, ஐரோப்பாவுடன் சேர்ந்து அமெரிக்கா கூட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில், நம் நாட்டின் பஞ்சாபைச் சேர்ந்த பிரபல தாதா ஜக்கு பகவான்புரியாவின் கும்பலைச் சேர்ந்த நிதிஷ் கவுசல் என்பவரை அமெரிக்க போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.

அமெரிக்க போலீசார் கூறுகையில், ‘ஜக்கு பகவான்புரியாவின் குற்ற கும்பலுக்கு, பஞ்சாபின் ஹோஷியார்பூர் மாவட்டத்தின் தண்டா போலீஸ் ஸ்டேஷன் பொறுப்பு அதிகாரி குரிந்தர்ஜித் சிங் நாக்ரா உதவியாக இருந்துள்ளார்.

‘இந்தியாவில் உள்ள தங்களது உறவினர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் தள்ளி விடுவேன் என மிரட்டி, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய குடும்பத்தினரை மிரட்டி, நான்கு கோடி ரூபாய் பறிக்க அவர் முயன்றுள்ளார்.

‘தாதா ஜக்கு பகவான்புரியாவின் ஆட்கள் தரும் தகவல்களை வைத்து, இந்த செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளார்’ என, குற்றஞ்சாட்டினர்.

இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, குரிந்தர்ஜித் சிங் நாக்ரா, பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில், அமெரிக்கா சுமத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஹோஷியார்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர் சந்தீப் குமார் மாலிக் உத்தரவுப்படி, குரிந்தர்ஜித் சிங் நாக்ரா மீது துறை ரீதியான விசாரணை நடந்தது.

இதில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம், 16 லட்சம் ரூபாயை அவர் லஞ்சமாக பெற்றது உறுதி செய்யப்பட்டது.

இதன்படி, ஊழல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்த போலீசார், குரிந்தர்ஜித் சிங் நாக்ராவை நேற்று கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Source link