அமளியால் லோக்சபா ஒத்திவைப்பு; ராஜ்யசபாவில் வெளிநடப்பு

புதுடில்லி: லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி காரணமாக, மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

பார்லிமென்ட் கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால் சபை முடங்கி வருகிறது. தற்போது ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்து வருகிறது. எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் இறங்கி ரகளையில் ஈடுபட்டு வருவதால், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி பதிலளித்து பேச முடியவில்லை.

இந்நிலையில் இன்று (பிப் 05) லோக்சபா காலையில் கூடியதுமே, எம்.பி.,க்கள் கடும் அமளியில் இறங்கியதால், கேள்வி நேர அலுவல்கள் ரத்து செய்யப்பட்டு, உடனடியாக சபை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் 12:00 மணிக்கு சபை கூடியது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். எம்பிக்கள் அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லை. இதனால் அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து ஓம்பிர்லா உத்தரவிட்டார்.

ராஜ்யசபா

ராஜ்யசபா காலை 11மணிக்கு கூடியது. அவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ” லோக்சபாவில் நாட்டின் நலன்கள் குறித்து பேச அனுமதிக்கப்படவில்லை” என குற்றம் சாட்டினார். இதற்கு ‘லோக்சபாவின் நடவடிக்கைகள் குறித்து ராஜ்யசபாவில் விவாதிக்க முடியாது” என மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார். எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தை ராஜ்யசபாவில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

Source link