இந்நிலையில் சென்னையில் உள்ள 383 அம்மா உணவகங்களை மேம்படுத்தி தரமான உணவு வழங்குவதன் அடிப்படையில் இந்த உணவகங்களை தினசரி சராசரியாக பயன்படுத்துவோர் எண்ணிக்கை 67 ஆயிரத்து 164இல் இருந்து 1 லட்சத்து 4 ஆயிரத்து 102 ஆக உயர்ந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,“சென்னை மாநகரில் வாழும் ஏழை எளிய மக்கள், கூலி வேலை செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டிட தொழிலாளர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் மற்றும் சென்னைக்கு பணி நிமித்தமாக வந்து செல்பவர்கள் பயன் பெறும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் மற்றும் நோயாளிகள், அவர்களின் துணைவருபவர்கள் பயன்பெறும் வகையில் இராயபுரம், அண்ணாநகர் மற்றும் தேனாம்பேட்டை ஆகிய 3 மண்டலங்களில் உள்ள 7 அரசு மருத்துவமனைகளிலும் என மொத்தம் தற்போது 383 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் காலை நேரத்தில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும் பொங்கல் ஐந்து ரூபாய்க்கும், மதிய நேரத்தில் சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் கருவேப்பிலை சாதம் தலா ஐந்து ரூபாய்க்கும் தயிர் சாதம் மூன்று ரூபாய்க்கும் மற்றும் மாலை நேரத்தில் இரண்டு சப்பாத்திகள் மூன்று ரூபாய்க்கும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் உத்தரவின்படி அம்மா உணவகங்களை மேம்படுத்தி தரமான உணவுகளை மக்களுக்கு வழங்கிட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் தினசரி சராசரியாக 67 ஆயிரத்து 164 பயனாளிகள் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு பயனடைந்து வந்த நிலையில் தற்போது தினசரி சராசரியாக 1 லட்சத்து 4 ஆயிரத்து 102 பயனாளிகள் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு பயனடைந்து வருகின்றனர். அம்மா உணவகங்களின் வாயிலாக கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ. 87 லட்சத்து 60 ஆயிரத்து 489 வருவாய் வரப்பெற்ற நிலையில் தற்போது ரூ.1 கோடியே 35 லட்சத்து 78 ஆயிரத்து 548 ஆக உயர்ந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
