உலகம் முழுவதும் சுற்றும் பயணிகளிடம் தங்களின் ‘பக்கெட் லிஸ்ட்’ கனவு எது என்று கேட்டால், பெரும்பாலானோர் நார்தர்ன் லைட்ஸ் (Northern Lights) பார்ப்பதை தான் சொல்வார்கள். வானமே உறைந்துபோய், விதவிதமான வண்ணக் கலவைகளுடன், நட்சத்திரக் கூட்டங்களுக்கு நடுவே நடனமாடும் அந்தப் பேரழகைக் காண்பது ஒரு மனிதனின் வாழ்நாளையே மாற்றியமைக்கும் ஒரு உன்னத அனுபவமாகும்.
லட்டு டப்பாவுக்கு பதிலா 3 மாச சம்பளம் போனஸ்… இந்த வேல எனக்கு வேண்டாம்; ஜப்பான் ஒர்க் கல்சரை நக்கல் செய்த இந்தியர்
ஐஸ்லாந்து, சுவீடன், பின்லாந்து, அலாஸ்கா மற்றும் கனடா போன்ற பல இடங்களில் இந்த நார்தர்ன் லைட்ஸைக் காண முடியும் என்றாலும், நார்வே நாடு வழங்கும் ஒரு விசித்திர ரயில் பயணம் இந்த அனுபவத்தை வேற லெவலுக்குக் கொண்டு சென்றுள்ளது.
நார்வேயின் ‘நார்தர்ன் லைட்ஸ் எக்ஸ்பிரஸ்’
நார்வேயின் ‘நார்விக்’ (Narvik) நகரத்திலிருந்து புறப்படும் இந்த ரயில், வெறும் பயணம் அல்ல; அது ஒரு சொகுசான சாகசம். இந்த ரயில் முழுமையாகக் கண்ணாடியால் சூழப்பட்டுள்ளது. நடுங்கும் பனிக்குளிரில், ரயிலின் உள்ளே இருக்கும் கதகதப்பில் அமர்ந்துகொண்டு, மேலே இருக்கும் கண்ணாடி வழியாக வான்வெளியில் நிகழும் வண்ண ஜாலங்களை நீங்கள் ரசிக்கலாம். இந்த ரயில் ‘ஓஃபோட்டன் லைன்’ (Ofoten Line) வழியாக இருண்ட, மலைப்பாங்கான காட்டுப் பகுதிக்குள் சுமார் 3 மணி நேரம் பயணிக்கும். இந்தத் பிரத்யேக ரயில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
நார்விக் டூ கட்டேராட்
இந்த ரயில் நார்விக் நிலையத்திலிருந்து புறப்பட்டு, சாலை வசதிகளே இல்லாத, முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட ‘கட்டேராட்’ (Katterat) என்ற தொலைதூர ரயில் நிலையத்தை அடைகிறது. இந்த இடத்திற்குச் செல்ல ரயில் மட்டுமே ஒரே வழி.
புறப்படும் நேரம்
அக்டோபர் 1 முதல் டிசம்பர் 16 வரை: இரவு 7:00 மணி
டிசம்பர் 17 முதல் மார்ச் 31 வரை: இரவு 7:45 மணி
டிக்கெட் கட்டணம்: ஒரு நபருக்கு 1,495 நார்வேஜியன் குரோன், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.14,900 ஆகும்.
டிக்கெட்டில் அடங்குபவை
3 மணி நேர ரயில் பயணம், வழிகாட்டியின் விளக்கம், சூடான பானங்கள், தின்பண்டங்கள் மற்றும் கட்டேராட் ஸ்டேஷனில் இறங்கியவுடன் குளிர்காய்வதற்காகத் தனித்துவமாக ஏற்பாடு செய்யப்படும் கேம்ப்ஃபயர் வசதி ஆகியவை அடங்கும்.
நார்வேயில் வேறு எப்படி நார்தர்ன் லைட்ஸைக் காணலாம்?
பனோரமிக் ரயில் தவிர, நார்வேயின் பொது ரயில் நெட்வொர்க்கான ‘ஓஃபோட்டன் லைன்’ மற்றும் ஆர்க்டிக் வளையத்திற்குள் செல்லும் ‘நார்ட்லாண்ட் லைன்’ (Nordland Line) ஆகியவற்றிலும் நீங்கள் பயணிக்கலாம். இவற்றில் கண்ணாடிக் கூரைகள் இருக்காது என்றாலும், உங்கள் ஜன்னல் இருக்கை மூலமாகவோ அல்லது ரயில் நிலைய பிளாட்பாரங்களில் இறங்கியோ அரோரா விளக்குகளைப் பார்க்க முடியும்.
