கோவை மாநகர காவல்துறைக்கு உட்பட்ட துடியலூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருபவர் வினோத்குமார் (வயது 35). இவர் கடந்த 15ஆம் தேதி, வினோத்குமார் சக போலீசாருடன் இணைந்து வெள்ளக்கிணறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அவர்களை பார்த்த போலீசார், “இங்கு எதற்காக நிற்கிறீர்கள்?” என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.
அப்போது காவலர் வினோத்குமார், அந்த இளம்பெண்ணை அந்த பகுதியில் யாரும் இல்லாத இடத்திற்கு தனியாக அழைத்துச் சென்று விசாரித்ததாக கூறப்படுகிறது. அதோடு இளம்பெண்ணிடம் விசாரணை என்ற பெயரில் அவருக்கு, காவலர் வினோத்குமார் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், தனது ஆண் நண்பரிடம் ஓடிச் சென்று தனக்கு நடந்ததை கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து, அவரது ஆண் நண்பர் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு இது குறித்து புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறை அதிகாரிகள் வினோத்குமார் மற்றும் புகார் அளித்த இளம்பெண் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், வினோத்குமார் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வினோத்குமார் மீது துடியலூர் காவல் நிலையத்தில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் நேற்று வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கோவையில் ஆண் நண்பருடன் நின்று பேசிக்கொண்டிருந்த இளம்பெண்ணை விசாரணை என்ற பெயரில் தனியாக அழைத்துச் சென்று காவலரே பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம், அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
