ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், இந்தோனேசியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஜப்பானின் அகனி யமாகுசியை இந்தியாவின் பி.வி.சிந்து எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் அகனி யமாகுசியை 21-14, 21-17 என்ற செட்களில் வீழ்த்தி பி.வி.சிந்து அபார வெற்றிபெற்றார்.
கொக்கைன், துப்பாக்கி, உலகக் கோப்பை இறுதிப் போட்டி: யார் இந்த ஸ்லாவ்கோ வின்சிச்?
இந்த வெற்றியின் மூலம் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து பெறும் முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும்.
உயரத்தை வைத்தே மிரட்டிய சிந்து
5 அடி 11 அங்குலம் உயரமுள்ள சிந்து, வெறும் 5 அடி 1 அங்குலம் உள்ள யமாகுசிக்கு எதிராக மிகவும் கவனமாக விளையாடினார். பொதுவாக யமாகுசி தனது தொடர் ஓட்டங்கள் மற்றும் உயரமான டாஸ்கள் மூலம் சிந்துவுக்கு நெருக்கடி கொடுப்பார். ஆனால் இந்த முறை, சிந்து அவரது அத்தனை வியூகங்களையும் உடைத்தெறிந்து, ஒரு ஆதிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் வரவிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவிற்குப் பெரிய பதக்க வாய்ப்பு இருப்பதை உறுதி செய்துள்ளார்.
இது 2018-ஆம் ஆண்டு வென்ற வேர்ல்ட் டூர் ஃபைனல்ஸ் மற்றும் 2016-ல் வென்ற சீனா ஓபன் தொடர்களுக்குப் பிறகு சிந்துவின் மிகப்பெரிய டூர் பட்டமாகும். 2019-ஆம் ஆண்டு இந்தோனேசியா சூப்பர் 1000 மற்றும் அதே ஆண்டில் சூப்பர் சீரிஸ் ஃபைனல்ஸ் போன்ற முக்கிய தருணங்களில் யமாகுச்சி சிந்துவுக்குத் தடையாக இருந்தார். ஆனால், இன்று பி.வி.சிந்து எதிராளியை துவம்சம் செய்து பட்டத்தை வென்றுள்ளார்.
அரை இறுதிப் போட்டியின் போது சிந்துவின் தாக்குதலைச் சமாளிப்பது சாத்தியமற்றது என்று கூறி விலகிய சென் யுஃபெய், சிந்துவின் பலம் அசாத்தியமானது என்று எச்சரித்திருந்தார். அமைதியாக இருக்கும் யமாகுச்சி அதனை நேரடியாக உணரும்படி ஆனது. அது எப்படி இருந்தது என்றால், வெறும் டிம்சம்ஸ் (Dimsums) சாப்பிடுபவர் வாயில் பச்சை மிளகாயைக் கடித்து காரத்தில் அலறுவது போல் இருந்தது சிந்துவின் ஆட்டம்.
ஆக்ரோஷமான ஆட்டத்தின் பின்னணி
வெறும் கிராஸ்கோர்ட் ஸ்மாஷ்கள் (Crosscourt smashes) மட்டுமே ஜப்பானிய வீராங்கனையை வீழ்த்தப் போதுமானதாக இருக்காது. அதற்கு லாங் ரேலிகளில் (Rallies) காட்டும் பிடிவாதமும், இரண்டு முக்கிய ஆயுதங்களும் தேவைப்பட்டன – ஒன்று சிந்துவின் உயரம், மற்றொன்று நெட் அருகே புயல் போல முன்னேறிச் சென்று ஸ்மாஷ் செய்வது.
ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்திற்குப் பிறகு, ஜப்பானிய வீரர்களின் ஆட்டத்தைக் குலைக்க சிந்து வானுயர டாஸ்களையே நம்பியிருந்தார். அதனால் ஷட்டிலை எவ்வளவு தூரம் வான்வெளியில் வைக்க முடியுமோ அவ்வளவு தூரம் கிளியர்ஸ், டாஸ்கள், லிப்ட்கள் மூலம் பறக்கவிட்டு யமாகுச்சியின் ஹிட்டிங் ரேடாரைக் குழப்பினார். யமாகுச்சியின் கண் மட்டத்திலிருந்து பார்க்கும்போது, சிந்துவின் நெட் அட்டாக் ஒரு பெரிய டொர்னாடோ புயல் வருவதைப் போல இருந்தது.
ஆட்டத்தின் முக்கியத் தருணங்கள்
முதல் செட்டில் சிந்து 9-11 எனப் பின்தங்கியிருந்தார். ஆனால் அங்கேயே ஒரு ஆக்ரோஷமான ட்ரெண்ட் தொடங்கியது. உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் யமாகுச்சி, சிந்துவின் உடலைக் குறிவைத்து ஸ்மாஷ் அடித்து 6-5 என முன்னிலை பெற்றபோது, அடுத்த புள்ளிகளிலேயே சிந்துவும் அதேபோல் யமாகுச்சியின் உடலைக் குறிவைத்து ஸ்மாஷ் அடித்து பதிலடி கொடுத்தார். 11-11 என்ற புள்ளியின் போதுதான் 36 ஷாட்டுகள் கொண்ட முதல் நீண்ட ரேலி அரங்கேறியது. யமாகுச்சி 16-12 என்ற புள்ளிகளில் இருந்து 16-15 என நெருங்கி வந்து, சிந்துவின் ஃபோர்ஹேண்ட் கார்னரைக் குறிவைத்தார். ஆனால் சிந்து தனது வெறித்தனமான நெட் கேம் மூலம் முதல் செட்டைக் கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டில் சிந்து மீண்டும் வானுயர லோப்களைப் பறக்கவிட, யமாகுச்சி அதை எதிர்கொள்ள முடியாமல் தலைசுற்றினார். யமாகுச்சி சும்மா ஒன்றும் 3 முறை உலக சாம்பியன் பட்டம் வெல்லவில்லை. அவரும் சிந்துவுக்கு ஸ்மாஷ் லெந்த் கிடைக்காமல் இருக்க ஹை கிளியர்ஸ் மூலம் பதிலடி கொடுத்து 8-4 என்ற புள்ளிகளை 8-7 என மாற்றினார். ஆனால் சிந்து தனது முன்னிலையைக் கவனமாகக் காத்துக்கொண்டார்.
வெற்றித் தருணம்
ஒருகட்டத்தில் 14-7 என இருந்த புள்ளி விவரம், யமாகுச்சியின் லேட் சர்ஜ் காரணமாக 18-17 என மாறியது. ஆனால் ஜப்பானிய வீராங்கனையால் சிந்துவை முந்த முடியவில்லை. இறுதியில் சிந்து அடித்த ஒரு லாங் டாஸை துரத்த முடியாமல் யமாகுச்சி கோட்டைவிட்டார். யமாகுச்சி அதை சேலஞ்ச் செய்த போதிலும், சிந்துவின் வெற்றி உறுதியானது.
சிந்துவிடம் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் பதக்கங்கள் அதிகமாக இருந்தாலும், சூப்பர் 750+1000 டூர் பட்டங்கள் மிகவும் குறைவு. 2021 ஒலிம்பிக்கில் தன் கைக்கு எட்டாமல் போன அதே டோக்கியோவின் டாப் போடியத்தில் இன்று சிந்து சாம்பியனாக ஏறி நின்று அசத்தியுள்ளார்.
