மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயம்பட்டி கிராமத்தில், இன்று (19.07.2026) அதிகாலை சுமார் 3 மணியளவில், பட்டியலினத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கும், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த மூன்று இளைஞர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி மிரட்டியதுடன், தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. அப்போது அங்கு இருந்த 70 வயதான சுப்பன் என்பவரை அவர்கள் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த இளைஞர்கள் அப்பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களின் நான்குக்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்த சுப்பன் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் அபிநவ் குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ராமர், லட்சுமணன் மற்றும் பிரவீண் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சமூக ரீதியான மோதல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவையெனில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவத்தால் காயம்பட்டி பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
