எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு செவிசாய்ப்போம்; மத்திய அரசு உறுதி

புதுடில்லி: பார்லிமென்டில் எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு செவிசாய்ப்போம் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

இது குறித்து பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது: பார்லிமென்டின் மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இதையொட்டி, அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை மத்திய அரசு இன்று கூட்டியது. இந்தக் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பார்லிமென்ட் என்பது அனைவருக்கும் பொதுவானது. அரசு அறிமுகப்படுத்தவுள்ள மசோதா மீதான விவாதங்களில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் ஆக்கப்பூர்வமாகப் பங்கேற்பார்கள் என்று நான் நம்புகிறேன். பார்லிமென்ட் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறதோ, அந்தளவுக்கு நாடு பயனடையும்.

அவை சுமூகமாகச் செயல்படுவதை உறுதி செய்ய அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்குச் செவிசாய்ப்போம்; அதேபோல அவர்களும் எங்கள் கருத்துகளுக்குச் செவிசாய்ப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

Source link