பெங்களூரு மெட்ரோ: சூடுபிடிக்கும் ரெட் லைன் ரயில் திட்டம்- 3 மாசத்தில் கிளியர் ஆகும் ஹெப்பல் ரூட் – bengaluru namma metro red line back on track after tunnel road project controversy

கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் சுரங்க வழித்தட சாலை அமைக்க திட்டமிடப்பட்டு வந்தது. இது ரெட் லைன் மெட்ரோ வழித்தடத்தை பாதிக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது சிக்கல் ஏதுமில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு நம்ம மெட்ரோவின் ரெட் லைன் வழித்தடமானது நகரின் தென்கிழக்கு பகுதியான சர்ஜாபூரை வடக்கில் உள்ள ஹெப்பல் உடன் இணைக்கிறது. இதன் 3ஏ திட்டத்திற்கு கடந்த 2024ஆம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதையடுத்து 2025 ஜனவரி 10ஆம் தேதி கர்நாடகா மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பின்னர் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விரைவாக ஒப்புதல் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து சிக்கல்கள் எழுந்தன.

காஸ்ட்லியான ரெட் லைன் மெட்ரோ திட்டம்

முதலில் இந்த திட்டத்திற்கான செலவுகள் அதிகமாக இருப்பதாக மத்திய அரசு கூறியது. ஒரு கிலோமீட்டருக்கு 776 கோடி ரூபாய் செலவிட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியது. பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தின் வரலாற்றில் மிக காஸ்ட்லியான திட்டம் என்று பேசப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மாநில அரசு சார்பில் சுரங்க வழிச் சாலை திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிக்கலை ஏற்படுத்திய பெங்களூரு சுரங்க வழிச் சாலை

​சில்க் போர்டு முதல் ஹெப்பல் வரை 16.75 கிலோமீட்டர் தூரத்திற்கு பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுரங்க வழித்தடத்தில் சாலை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வேகம் காட்டினார். இது ரெட் லைன் மெட்ரோ வழித்தடத்தின் குறுக்கே செல்வதால் சிக்கல் ஏற்பட்டது.

விரிவான திட்ட அறிக்கை விரைவாக தயாரிக்கப்பட்டது. டெண்டர் கோரப்பட்டது. ஒப்பந்ததாரரும் அடையாளம் காணப்பட்டார். அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துவிட்டால் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கிவிடும் என்றனர்.

கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்குகள்

இது செயல்படுத்தப்பட்டால் ரெட் லைன் மெட்ரோ ரயில் திட்டத்தை கைவிடும் நிலை ஏற்படும் சூழல் உருவானது. ஆனால் சட்ட ரீதியாக சிக்கல் உருவாகின. சுரங்க வழிச் சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் பலரும் வழக்கு தொடர்ந்தனர். சுற்றுச்சூழல் அனுமதியை பெறாமல் மாநில அரசு செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனால் இந்த திட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகளின் வேகம் குறைந்தது.

ரெட் லைன் மெட்ரோ: அக்டோபர் 2026ல் ஒப்புதல்

மறுபுறம் ரெட் லைன் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான செலவுகளை குறைக்க வழி இருக்கிறதா என ஆராய்வதற்கு சிஸ்ட்ரா என்ற நிறுவனத்தை மத்திய அரசு சீராய்வு செய்து அறிக்கை சமர்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

கடந்த பிப்ரவரி மாதம் புதிய திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் சமர்பித்தது. இதற்கு வரும் அக்டோபர் மாதம் ஒப்புதல் கிடைக்க வாய்ப்பிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் சுரங்க வழிச் சாலை திட்டத்தால் ஏற்பட்ட பின்னடைவு நீங்கியது.

ஏப்ரல் 2033ல் பெங்களூரு ரெட் லைன் மெட்ரோ நிறைவு

டெல்லியில் இருந்து ஒப்புதல் கிடைத்துவிட்டால் அடுத்த ஆண்டு மே மாதம் முதல் கட்டுமானப் பணிகள் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் நீளம் 37.8 கிலோமீட்டர். செலவிற்கான மதிப்பீடு 25,999 கோடி ரூபாய். திட்டமிட்டபடி பணிகள் தொடங்கி நடைபெற்றால் ஏப்ரல் 2033ல் முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source link