உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி : கேரளத்தில் விடுமுறை அறிவிப்பு!

பிபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையே இந்திய நேரப்படி நள்ளிரவு 12:30 மணிக்குத் தொடங்கி, அதிகாலை வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் கேரளத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளை (20.07.2026) விடுமுறை அறிவித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் நள்ளிரவில் இந்த போட்டியைக் கண்டு ரசிப்பதற்கும், அதன் பின்னர் ஏற்படும் தூக்கமின்மை மற்றும் உடல் சோர்வைத் தவிர்ப்பதற்கும் ஏதுவாக இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதோடு மாணவர்களின் மன மற்றும் உடல் நலனைக் கருத்தில் கொண்டும், விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி உட்பட பல்வேறு தரப்பினரும், மாணவர்களும் விடுத்த கோரிக்கையை ஏற்று அம்மாநில முதலமைச்சர் வி.டி. சதீசன் இந்த சிறப்பு விடுமுறையை அறிவித்துள்ளார். எனினும், ஏற்கனவே திட்டமிடப்பட்ட பொதுத்தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகள் எந்தவித மாற்றமும் இன்றி வழக்கம்போல் நடைபெறும் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.  

இந்நிலையில் கேரளம் முதலமைச்சர் வி.டி. சதீசன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அர்ஜென்டினா – ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான பிரம்மாண்ட இறுதிப் போட்டிக்கு முன்னதாக, கேரளம் உச்சக்கட்ட கால்பந்து காய்ச்சலில்(ஆர்வம்) மூழ்கியுள்ளது. நமது இளம் ரசிகர்கள் அடுத்த நாள் காலையில் பள்ளி, கல்லூரி பற்றிய கவலைகள் ஏதுமின்றி இந்த நள்ளிரவு விறுவிறுப்பான போட்டியைக் கண்டு ரசிப்பதை உறுதி செய்யும் வகையில், நாளை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. விழித்திருங்கள், சத்தமாக உங்கள் ஆதரவை வெளிப்படுத்துங்கள், மேலும் விளையாட்டை மகிழ்ந்து ரசியுங்கள்”எனக் குறிப்பிட்டுள்ளார். 

Source link