சென்னை: ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்று மக்கள் முடிவு எடுத்துவிட்டார்கள். அதிமுக இப்போது தேர்தல் களத்தில் இல்லை என்று திமுக நேர்காணலில் கலந்து கொண்ட ஓபிஎஸ் கூறி உள்ளார்.
சட்டசபை தேர்தலில் திமுக வேட்பாளர்களாக போட்டியிட விரும்பி வேட்பு மனு அளித்த கட்சி நிர்வாகிகளிடம் அதன் தலைமை நேர்காணல் நடத்தி வருகிறது. நேர்காணல் மார்ச் 22ம் தேதி வரை நடக்கிறது.
நேர்காணலை நடத்தும் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், வேட்பாளர் போட்டியிட விரும்பும் தொகுதியின் களநிலவரம், அங்கு கூட்டணிக் கட்சிகளுக்கான தற்போதுள்ள பலம், மக்கள் மனநிலை, அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்ததா என்பன உள்ளிட்ட விவரங்களை கேட்கிறார்.
போட்டியிட விரும்பி மனு அளித்த தூத்துக்குடி, மதுரை, தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடந்தது. இந்த நேர்காணலில் அண்மையில் திமுகவில் இணைந்த, 3 முறை முதல்வர் பதவி வகித்த ஓபிஎஸ் கலந்து கொண்டார். அவரிடம் முதல்வர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.
நேர்காணல் முடிந்த பின் வெளியே வந்த ஓபிஎஸ்சை நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர். 3 முறை முதல்வராக பதவி வகித்துள்ளீர்கள், மாற்று கட்சியான திமுகவில் இணைந்த பின் நீங்கள் கலந்து கொண்ட நேர்காணல் எப்படி இருந்தது என்று அவர்கள் கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்து ஓபிஎஸ் கூறியதாவது;
தமிழக முதல்வரின் நீண்ட, 5 ஆண்டு கால அரசியல், ஆட்சியின் நன்மைகள், திட்டங்கள், பரவலாக மக்கள் மத்தியில் பேசப்படுகிற சூழ்நிலை இருக்கிறது. அத்தனை திட்டங்களும் அற்புதமான திட்டங்கள் என்று மக்கள் பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள். உறுதியாக, 2ம் முறையாக ஸ்டாலின் முதல்வர் அரியணையில் அமருவார்.
அவர் தான் முதல்வராக வரவேண்டும் என்று மக்கள் முடிவு எடுத்துவிட்டார்கள் என்பதை எனது தேர்தல் கால சுற்றுப்பயணத்தில் நான் தெரிந்து கொண்டேன். தொகுதிகளில் விருப்ப மனு அளித்தவர்களிடம் அவர் கருத்து கேட்டு இருக்கிறார். வெற்றி வாய்ப்பு பற்றி கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதிமுகவே இப்போது களத்தில் இல்லை.
இவ்வாறு ஓபிஎஸ் பேட்டியளித்தார்.
ஓபிஎஸ் உடன் அவரது மகன் ரவீந்திரநாத்தும் நேர்காணலில் கலந்து கொண்டார்.
