புதுடில்லி: ராஜ்யசபா எம்பிக்களுக்கு கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மத்திய அரசு கிட்டத்தட்ட 262 கோடி ரூபாய் செலவு செய்துள்ள விவரம் தகவல் அறியும் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.
சந்தர்சேகர் கவுர் என்பவர், ராஜ்ய சபா எம்பிக்களுக்கு அளிக்கப்படும் ஊதியம், படிகள் போன்றவற்றிற்கு ஆகும் செலவு விவரங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தருமாறு விண்ணப்பித்து இருந்தார்.அவரின் கேள்விகளுக்கு ராஜ்யசபா செயலகம் பதில் அளித்து உள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ள விவரம் வருமாறு;
2024-25ம் நிதியாண்டில் ராஜ்யசபா எம்பிக்களுக்கு ஊதியமாக ரூ. 25.71 கோடி, மருத்துவப்படி ரூ.8.2 கோடி மற்றும் பயணப்படிக்காக ரூ.24.99 கோடி செலவிடப்பட்டு உள்ளது. ஒட்டு மொத்தமாக அந்த ஆண்டில் மட்டும் ரூ.98 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளது.
இதுவே 2025-26ம் நிதியாண்டில் ராஜ்யசபா எம்பிக்களுக்கு ஒட்டு மொத்தமாக ரு.163 கோடி செலவிடப்பட்டு உள்ளது. 2024-25ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது ரூ.65 கோடி கூடுதலாகும்.
இந்த நிதியாண்டில் மட்டும் எம்பிக்களுக்கான ஊதிய செலவு மட்டும் ரூ.44.6 கோடி ஆகும். மருத்துவப்படிகள் ரூ.9.6 கோடி, பயணப்படி ரூ. 36 கோடி மற்றும் இன்னபிற படிகளுக்கு ரூ.58.78 கோடி செலவிடப்பட்டு உள்ளது. ஒட்டு மொத்தமாக 2024-26 ஆண்டுகளில் எம்பிக்களுக்கான செலவுத்தொகை ரூ.262 கோடியாகும். இதில் அதிகபட்சமாக ஊதியத்திற்காக மட்டும் ரூ.151 கோடி செலவிடப்பட்டு உள்ளது.
