சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேருக்கு காயம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடையாரில் இருந்து அரசு பேருந்து ஒன்று செம்மொழி சாலை வழியாக தாம்பரம் நோக்கி இன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியின் எதிரே ஒரு லாரி வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த லாரிக்கு வழிவிடுவதற்காக அரசு பேருந்து ஓட்டுநர், சாலையின் ஓரம் பேருந்தை நிறுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அருகே உள்ள 8 அடி ஆழமுள்ள சதுப்பு நில பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 20 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து விபத்துக்குள்ளானவர்கள் உடனடியாக மீட்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த பேருந்தில், 5 வயது குழந்தை உட்பட பெரியவர்கள் என அனைவரும் பயணித்துள்ள நிலையில் யாருக்கும் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மேடவாக்கம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்குள்ளான பேருந்தை மீட்கும் பயணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
