– நமது சிறப்பு நிருபர் –
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி, டில்லி ஜந்தர் மந்தரில், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து 21 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த அவரை, டில்லி போலீசார் நேற்று டில்லி சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரது உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
யார் அவர்
லடாக்கின் லே பகுதியில் பிறந்தவர் சோனம் வாங்சுக். இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ளார். லடாக் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான திட்டம், சுற்றுச்சூழல் சவால்களுக்கான அணுகுமுறைகள் காரணமாக பிரபலம் அடைந்தார்.
கல்வியை சீர்திருத்த லடாக்கில் செக்மோல் என்ற பெயரில் மாணவர் கல்வி மற்றும் கலாசார இயக்கம் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்துக்கு வெளி நாடுகளில் இருந்து நிதி பெறப்படுகிறது. இவர் ரமோன் மகசேசே விருது பெற்றுள்ளார்.
கல்வியாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற பெயரில் அறியப்பட்ட இவரது பின்னணி, பல்வேறு சர்ச்சைகளை கொண்டது. லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கேட்டு கடந்த ஆண்டு போராட்டம், பேரணி ஆகியவற்றை நடத்தினார். பிறகு உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டார். அதில், லே பகுதியில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. அரசு அலுவலகங்கள், பொதுச்சொத்துகள் ஆகியன சேதப்படுத்தப்பட்டன. 4 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார். இதன் பிறகு கைதான அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. மாநிலத்தின் பாதுகாப்பு கருதி ராஜஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த காலகட்டத்தில் லடாக் டிஜிபி நிருபர்களிடம் கூறும் போது, ‘சோனம் வாங்சுக் பாகிஸ்தானை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்தார். பாகிஸ்தானில் அந்நாட்டு ஊடகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்’ என்று தெரிவித்துள்ளார். வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளுக்கும் சென்று வந்துள்ளார். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. போராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய வாங்சுக், நேபாளம் மற்றும் வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்தை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியிலும்!
சோனம் வாங்சுக் போராட்டம் தொடர்பாக, தேஜ கூட்டணி அரசை எதிர்க்கட்சிகள் குறை கூறி வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் ஆட்சியும், அவர் மீது தேச விரோத செயல்பாடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது. 2007 ம் ஆண்டு பிப்., மாதம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அவருக்கு அனுப்பப்பட்ட நோட்டீசில் இந்த குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
அரசு அதிகாரிகளை அநாகரீகமாக பேசியதுடன், மிரட்டியது, அரசு நிலத்தை ஆக்கிரமித்தது, வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக நிதி பெற்றது, சீனாவில் உள்ள மற்றும் பல்வேறு தேச விரோத அமைப்புகளுடன் உள்ள தொடர்பு உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கும்படி காங்கிரஸ் ஆட்சியில் அவருக்கு லே மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
