மனைவி, இரண்டு மகன்கள் கொலை வழக்கு.. கணவரை விடுவித்த உயர் நீதிமன்றம்

உத்தர பிரதேசத்தில் மனைவி மற்றும் இரண்டு மகன்களை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபரை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

சூழ்நிலை சான்றுகளை மட்டுமே அடிப்படையாக கொண்ட வழக்குகளில், அரசுத் தரப்பு ஒரு நியாயமான மற்றும் நம்பத்தகுந்த நோக்கத்தை நிறுவ வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

மனைவி மற்றும் மகன்கள் கொலை:

உத்தர பிரதேசத்தில் உள்ள மதுரா மாவட்டத்தில் கடந்த 2017 செப்டம்பர் 3ம் தேதி அன்று வீட்டின் உள்ளே மனைவி மற்றும் இரண்டு மகன்கள் சடலமாக கிடந்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

அப்போது அந்த வீட்டில் வேறு யாரும் இல்லை என சம்பவத்தை நேரில் பார்த்த உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் அந்த சமயத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் அந்த வீட்டில் இல்லை எனவும், மூன்று பேர்களும் ஒரு கூர்மையான பொருளால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டு கிடந்த நிலையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கணவர் கைது:

இதையடுத்து டெல்லியில் உயிரிழந்த பெண்ணின் கணவரான பாபுவை ரத்தக்கறை படிந்த சட்டையுடன் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பாபுவின் வாக்குமூலத்தின் பேரில், கொலைக்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும் மீட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து 2022 ஜனவரி 27ம் தேதி அன்று, மதுரா விசாரணை நீதிமன்றம் கைது செய்யப்பட்டவரை குற்றவாளி என தீர்ப்பளித்து, ஆயுள் தண்டனை விதித்தது.

இதற்கு எதிராக குற்றம்சாட்டப்பட்ட பாபு, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார். அப்போது இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.ஜே. முனிர் மற்றும் சஞ்சீவ் குமார் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “கைது செய்யப்பட்டவர், தான் குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதம் குறித்து, காவல்துறைக்கு தெரிவித்ததாக எந்தவொரு சுயாதீன சாட்சியும் அளிக்கவில்லை.

இத்தகைய கொடூரமான குற்றத்தை செய்வதற்கு குற்றம் சாட்டப்பட்டவருக்கு எந்த உள்நோக்கமும் இருந்ததாக அரசுத் தரப்பு சாட்சியம் கூறவில்லை.

இதைத்தொடர்ந்து சூழ்நிலைச் சான்றுகளின் அடிப்படையில் மட்டுமே ஒரு தனி நபரை குற்றவாளியாக்குவது முற்றிலும் பாதுகாப்பற்றது என்று சுட்டிக்காட்டி, 2022-ஆம் ஆண்டு மதுரா விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தது.

Source link