மதுரை மாவட்டத்தை சுற்றியுள்ள மலைகளில் 2,200 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுகள் காணப்படுகிறது. இந்த கல்வெட்டுகள் பெரும்பாலும் சமண முனிவர்கள் தங்கியிருந்த குகைகளில் அதிகம் பொறிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் மாங்குளம் அருகே உள்ள மினாட்சிபுரம் பகுதியில் உள்ள மலையில் சமண முனிவர்களுக்கான கற்படுகைகளும், கிபி 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமி கல்வெட்டுகளும் காணப்படுகிறது.
இந்த நிலையில் அமைச்சர் ராஜ்மோகன், இன்று (19-07-26) அந்த மலைக்குச் சென்று சமணர் படுகைகளையும், பிராமி கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தார். குறிப்பாக சுமார் 500 மீட்டர் வரை அந்த மலை மேல் நடந்து ஏறி அந்த மலை மேல் இருக்கக்கூடிய பிராமி கல்வெட்டுகளையும், சமணர் படுகைகளையும் ஆய்வு செய்து அது குறித்த வரலாறுகளையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதே போல் அந்த மலையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது, படுப்பதற்காக சமணர்கள் செதுக்கி வைத்திருந்த படுகைகளில் அமைச்சர் ராஜ்மோகன் சிறிது நேரம் படுத்தார். அதன் பின்னர் இந்த மலையின் சிறப்பம்சங்கள் குறித்தும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் பல்வேறு விஷயங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
