இதனிடையே சோனம் வாங்சுக்கின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான நடைபெற்ற விசாரணையில், சோனம் வாசுங்க்கின் உடல்நிலையை அரசு மருத்துவர் குழு கவனிக்கும் என்றும் அவருக்கு உடல்நலத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு அதற்கு ஒரு தீர்வு காணும் என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. இதற்கிடையே சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இத்தகைய சூழலில் தான் ஜந்தர் மந்தரில் கடந்த 21 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சோனம் வாங்சுக், காவல்துறையினரால் நேற்று (18.07.2026) காலை சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுயநினைவுடன் உள்ளார், அவரது உடல்நிலை சீராக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சோனம் வாங்சுக்கை டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்கக் கோரி அவருடைய மனைவி கீதாஞ்சலி ஆங்மோ டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், சோனம் வாங்சுக் சிகிச்சைப் பெறும் மருத்துவமனை அறைக்கு வெளியே காவலர்கள் உள்ளதாக வாதிட்டார். இதனை கேட்ட நீதிமன்றம், மருத்துவமனை வெளியே காவலர்கள் உள்ளது பற்றி அரசு தரப்பு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
