5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஈரான்

5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

டெஹ்ரான்: மேற்காசிய நாடான ஈரானின் குசெஸ்தான் மாகாணத்தில் , 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, புவியின் மேற்பரப்பில் இருந்து, 12 கி.மீ., ஆழத்தில் பதிவானது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய, இரண்டு மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஈரான் அரேபிய மற்றும் யூரேசிய நிலத்தட்டு எல்லையில் அமைந்துள்ளதால், ஈரானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. அதே போல், தென் அமெரிக்க நாடான பெருவில், 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தோனேஷியா

கடலில் தத்தளித்தவர்கள் மீட்பு

ஜகார்த்தா: தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் தெற்கு சுலவேசி மாகாண கடற்பகுதியில், 78 பேருடன் சென்ற கே.எம்.நுருல் சல்சா என்ற படகு, இயந்திர கோளாறால், கடந்த 15ம் தேதி மூழ்கியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 20க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். மற்றவர்கள் மீட்கப்பட்டனர். மாயமானவர்களை தேடும் பணி நடக்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மீன்பிடி வலையில் பற்றிக்கொண்டு கடலில் மிதந்த நிலையில், ஐந்து பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். அதில், 7 வயது சிறுமியும் ஒருவர். ஐந்து பேரும் விபத்துக்குள்ளான படகில் இருந்தவர்கள் என தெரிந்தது.

சீனா

முன்னாள் வங்கி தலைவர் மீது ஊழல் விசாரணை

பீஜிங்: சீன அரசுக்கு சொந்தமான, சீனா வளர்ச்சி வங்கியின் முன்னாள் தலைவர் ஒயாங் வெய்மின் மீது, சட்ட விதிமீறல் குற்றச்சாட்டுகளின்படி ஊழல் தடுப்பு அமைப்புகள் விசாரணையை தொடங்கியுள்ளன. சீனாவின் மத்திய ஒழுங்கு விசாரணை கமிஷன் மற்றும் தேசிய மேற்பார்வை கமிஷன் இணைந்து இந்த விசாரணையை நடத்தி வருகின்றன. 1986ல், சீன கம்யூ., கட்சியில் இணைந்த ஒயாங், சீன மக்கள் வங்கியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 2019ல், சீன வளர்ச்சி வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்ட அவர், 2023ல் பதவியில் இருந்து விலகினார். அதிபர் ஷீ ஜின்பிங் தலைமையில் நடக்கும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த விசாரணை நடக்கிறது.

***

பாகிஸ்தான்

நாட்டின் இடைநிலை வர்த்தகம் 90% சரிவு

இஸ்லாமாபாத்: பாக்., வழியாக ஆப்கன் உலக நாடுகளுடன் செய்து வந்த வர்த்தகம், 2021 உடன் ஒப்பிடுகையில், 48,000 கோடி ரூபாயில் இருந்து தற்போது வெறும், 4,000 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. இது, 90 சதவீதம் குறைவு.

ஆப்கானிஸ்தான் ஒரு நிலத்தடை நாடு. கடல் இல்லாததால், தன் பொருட்களை ஏற்றுமதி – -இறக்குமதி செய்ய பாகிஸ்தானின் துறைமுகங்களை பயன்படுத்தியது. இதை, ‘டிரான்சிட்’ வர்த்தகம் அல்லது இடைநிலை வர்த்தகம் என்பர். 2021ல், ஆப்கனில் தலிபான் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின், அவர்கள் ஈரான் வழித்தடத்தை அதிகம் பயன்படுத்தத் துவங்கினர். மேலும், பாதுகாப்பு காரணங்களால் பாக்., 2025 அக்டோபரில் எல்லையை மூடியது. இதனால் பாக்., வழியே நடந்த வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

Source link