தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் தேர்தலில் இயக்குநர் சேரனின், ‘நம்ம பாக்கியராஜ் அணி’ வெற்றி பெற்றுள்ளது.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் 3 வருடத்துக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026 முதல் 2029 காலத்திற்கான தேர்தல் கடந்த 12ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால், சங்கத்தின் தலைவராக இருந்த இயக்குநர் கே.பாக்யராஜ் திடீரென மறைந்ததால் அந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, இந்த சங்கத்தின் தேர்தல் இன்று (19-07-26) சென்னை நடைபெற்ற்றது. இந்த தேர்தலில், வி.சி.குகநாதனின் ‘திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ்’ என்ற அணியும், இயக்குநர் சேரனின் ‘நம்ம பாக்யராஜ்’ என்ற அணியும் போட்டியிட்டன. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவில் எழுத்தாளர்கள் காலை முதலே வாக்களித்தனர்.
இந்த நிலையில், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குநர் சேரன் 12 தபால் வாக்குகள் உள்பட 279 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வி.சி.குகநாதன் 155 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். அதே போல், திரைப்பட எழுத்தாளர் சங்க துணைத் தலைவர்கள் பதவிக்கு, ‘நம்ம கே.பாக்யராஜ்’ அணி சார்பில் போட்டியிட்ட சமுத்திரகனி, சினேகன் ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
