புதுடில்லி: உஸ்பெகிஸ்தானில் நடந்த, 58வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டியில், நம் நாட்டின் சார்பில் பங்கேற்ற நான்கு மாணவர்களும், தலா ஒரு தங்கப் பதக்கத்தை வென்று அசத்தி உள்ளனர். இதன் மூலம், ஒட்டுமொத்த தரவரிசையில், சீனா, வியட்நாம் மற்றும் ரஷ்யாவின் தனிநபர் பங்கேற்பாளருடன் இணைந்து, முதலிடத்தை நம் நாடு பகிர்ந்து கொண்டுள்ளது.
மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில், கடந்த 10 – 19 வரை, 58வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டி நடந்தது. இது, 1968 முதல் ஆண்டுதோறும் நடக்கிறது. உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான உலகளாவிய வேதியியல் போட்டியான இது, மாணவர்களின் கோட்பாடு மற்றும் செய்முறை திறன்களை சோதிக்கும் ஒரு மிகச்சிறந்த களமாக விளங்குகிறது.
இந்தாண்டுக்கான போட்டியில், 93 நாடுகளைச் சேர்ந்த மொத்தம், 363 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், நம் நாட்டின் சார்பில் பங்கேற்ற நான்கு மாணவர்களும், தலா ஒரு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர். ஒடிஷாவைச் சேர்ந்த தேபதத்தா பிரியதர்ஷி, பஞ்சாபைச் சேர்ந்த ஹர்ஷித் சிங்கால், டில்லியைச் சேர்ந்த கபீர் சில்லார், தெலுங்கானாவைச் சேர்ந்த சந்தீப் குச்சி ஆகிய மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்றனர். இதன் மூலம் சீனா, வியட்நாம் மற்றும் ரஷ்யாவின் தனிநபர் பங்கேற்பாளருடன் இணைந்து, இந்த ஆண்டு ஒட்டுமொத்த தரவரிசையில் முதலிடத்தை நம் நாடு பகிர்ந்து கொண்டுள்ளது.
போட்டியில் பங்கேற்ற நம் அணியை, கொல்கட்டாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் சுபஜித் பந்த்யோபாத்யாயா, ஹோமி பாபா அறிவியல் கல்வி மையத்தின் டாக்டர் இந்திராணி தாஸ் சென் ஆகியோர் வழிநடத்தினர். மேலும், ஐ.ஐ.டி., கரக்பூரின் டாக்டர் அனுபெந்து அதிகாரி, மும்பை என்.இ.எஸ்., ரத்னம் கல்லுாரியின் டாக்டர் ஜெயஸ்ரீ கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அறிவியல் பார்வையாளர்களாக பங்கேற்று மாணவர்களுக்கு ஊக்கமளித்தனர்.
கடந்த ஆண்டு நடந்த போட்டியில் இரண்டு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளி பதக்கங்களை நம் நாடு வென்ற நிலையில், இந்த ஆண்டு நான்கு தங்கப் பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளது.
உயிரியல் ஒலிம்பியாட்
லிதுன்யாவின் விலிநியுஸ் நகரில் நடந்த 37 வது சர்வதேச உயிரியியல் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மாணவர்கள் பதக்கம் வென்றுள்ளனர். ஹரியானாவின் பவ்யா குன்வால் தங்கம் வென்றார்.மேற்கு வங்கத்தின் சுமைல் மைதி, ராஜஸ்தானின் நிஷித் கலனி, பஞ்சாபின் அன்மோல் குமார் ஆகியோர் வெ ண்கல பதக்கம் வென்றுள்ளனர்.

கடந்த 12ம் தேதி துவங்கிய ஒலிம்பியாட் இன்று நிறைவு பெற்றது. 78 நாடுகளைச் சேர்ந்த 307 மாணவர்கள் இத்தொடரில் பங்கேற்றனர். இந்தத் தொடரில் 26 வது முறையாக பங்கேற்றது.
