லண்டன்: இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 387 ரன் குவித்துள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணிக்கு டக்கெட் மற்றும் பெத்தேல் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் இந்திய பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு விளையாடினர். இதனால், அந்த அணியின் ரன் மளமளவென உயர்ந்தது. சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் விளாசினர். இவர்களின் விக்கெட்டை கைப்பற்ற இந்திய வீரர்கள் கடுமையாக போராடினர்.
இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 192 ரன்னை எட்டியபோது, இந்த இணை பிரிந்தது. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இளம்வீரர் பெத்தேல் 91 ரன்னில் பிரசித் கிருஷ்ணா பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டக்கெட் சதம் அடித்தார். அவர் 141 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரூட்டும், பட்லரும், இந்திய பந்து வீச்சை சிதறவிட்டனர்.
இதனால், இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 387 ரன் குவித்துள்ளது. ரூட் 48 பந்துகளில் 74 ரன்னும், பட்லர் 13 பந்தில் 41 ரன்னும் அடித்து அணியின் ரன் குவிப்பிற்கு கைகொடுத்தனர்.
