அல்-பர்காஷ் நிறுவனத்தின் பொன் விழா; துவக்கி வைத்த மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ!

சவுதி அரேபியாவில் செயல்பட்டு வரும் அல்-பர்காஷ் நிறுவனத்தின் 50-ஆம் ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு சிதம்பரத்தில் பல்வேறு சமூக நலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக தில்லைக்காளியம்மன் கோயில் மற்றும் சிதம்பரம் இராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளி வளாகங்களில் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், சிதம்பரம் புறவழிச்சாலை பகுதியில் உள்ள மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளி, ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து சிதம்பரம் ஜி.எம். வாண்டையார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், சிதம்பரத்தைச் சேர்ந்த அல்பர்காஷ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஏ.எஸ். சபாநாயகம் தலைமையில் அரசு மருத்துவமனைகள், அரசு பள்ளிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிறுவனத்தின் மூத்த அலுவலர் சிவக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவில் சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள், 10-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், ஆதரவற்றோருக்கு தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள், சாலையோர வியாபாரிகளுக்கு பெரிய குடைகள் மற்றும் நலிவுற்ற குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வையொட்டி இரத்ததான முகாம், தூக்கமின்மை பிரச்சினைகளைக் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம் ஆகியவையும் நடைபெற்றன.

விழாவில் சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ மு. தமிமுன் அன்சாரி, புவனகிரி எம்எல்ஏ அருண்மொழித்தேவன், எம்ஆர்கே கல்விக் குழுமத் தலைவர் எம்ஆர்கேபி கதிரவன் ஆகியோர் மருத்துவ முகாம்களை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினர். சென்னை ராதா இன்ஜினியரிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் செந்தில்குமார், அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் இயக்குநர் பாலசுப்ரமணியன், தொழிலதிபர் முருகேசன், அரசு வழக்கறிஞர் ஏ.எஸ். வேல்முருகன், ஏ.எஸ்.ஞானசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் மூசா, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், அதிமுக மாவட்ட நிர்வாகி தோப்பு சுந்தர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், கல்வி மற்றும் சமூக அமைப்புகளின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நிறுவனத்தின் பொது மேலாளர் ஜெகதீஷ் மற்றும் உயர் அலுவலர்களான சந்தோஷ்பாபு, செல்வம், பழனிவேலாயுதம், கனகசபை, விஜயகுமார், மணிகண்டன், தங்கராசு, விஜயகிரி, அறிவழகன், குருபிரசாத், டாக்டர் கார்த்திகேயன், வெங்கடேசன், மணவாளன் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும், நிறுவன உறுப்பினர்களின் குழந்தைகள் பங்கேற்ற சிலம்பாட்டம், நடன நிகழ்ச்சி, ஓவியப் போட்டி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் நிறைவில் நிறுவன மேலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.

Source link