-டில்லி சிறப்பு நிருபர்-இரு வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடும் தொகுதியில் ஒருவரின் வெற்றி செல்லாது என

-டில்லி சிறப்பு நிருபர்-

இரு வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடும் தொகுதியில் ஒருவரின் வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்டால் இரண்டாம் இடம் பிடித்தவரை வெற்றியாளராக அறிவிக்கலாம்; மறுதேர்தல் தேவையில்லை’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒடிஷாவின் தெலங் பஞ்சாயத்துக்கு, 2022ல் நடந்த தேர்தலில், இரண்டு பேர் மட்டுமே போட்டியிட்டனர். வெற்றி பெற்றவர் பஞ்சாயத்து தலைவராக அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது வெற்றிக்கு எதிராக எதிர்த்துப் போட்டியிட்டவர் மனு தாக்கல் செய்தார்.

விசாரணை

மனுவை விசாரித்த தேர்தல் தீர்ப்பாயம், தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவரின் வெற்றி செல்லாது என அறிவித்தது. இதை எதிர்த்து ஒடிஷா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தீர்ப்பாயத்தின் உத்தரவை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்திற்கு மறுதேர்தல் நடத்த உத்தரவிட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

செல்லாது

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இரண்டு வேட்பாளர்கள் மட்டுமே களம் காணும் ஒரு தொகுதியில், வெற்றி பெற்றவரின் தேர்வு ரத்து செய்யப்பட்டால், அவருக்குப் பதிவான ஓட்டுகள் செல்லாதவையாகக் கருதப்படும். அங்கு மீண்டும் தேர்தல் நடத்தத் தேவையில்லை.

இரண்டாம் இடம் பிடித்தவர், சட்டப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராகவே கருதப்படுவார். ஒருவேளை இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டு, அதில் முதலிடம் பிடித்தவர் நீக்கப்ட்டால் மட்டுமே மக்களின் உண்மையான விருப்பத்தை அறிய மீண்டும் தேர்தல் நடத்துவது அவசியமாகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source link