துபாய்: ஐ.சி.சி., ‘டி-20’ பவுலர் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா 5வது இடத்துக்கு முன்னேறினார்.
சர்வதேச ‘டி-20’ போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பவுலர் பட்டியலில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 702 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருந்து ‘நம்பர்-5’ இடத்தை கைப்பற்றினார். இவர், சமீபத்தில் முடிந்த ‘டி-20’ உலக கோப்பையில் 14 விக்கெட் சாய்த்தார்.
சுழற்பந்துவீச்சாளர்களான ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (753 புள்ளி), இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி (740 புள்ளி), முதலிரண்டு இடங்களில் நீடிக்கின்றனர்.
தென் ஆப்ரிக்காவின் கார்பின் பாஷ் (690 புள்ளி) 6வது இடத்துக்கு தள்ளப்பட்டார். நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் (654), 24வது இடத்தில் இருந்து 13வது இடத்துக்கு முன்னேறினார்.
பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் திலக் வர்மா (742), 7வது இடத்தில் இருந்து 6வது இடத்துக்கு முன்னேறினார். முதலிரண்டு இடங்களில் இந்தியாவின் அபிஷேக் சர்மா (875), இஷான் கிஷான் (871) தொடர்கின்றனர்.
