திருச்சி மாவட்டம் துறையூர் அருகே, தலித் கிறிஸ்தவர் ஒருவரின் உடலை நல்லடக்கம் செய்யக் கல்லறைத் தோட்டத்தில் இடம் மறுக்கப்பட்டதால், கடந்த 3 நாட்களாக அவரது சடலம் வீட்டிலேயே வைக்கப்பட்டிருக்கும் அவலம் அரங்கேறியுள்ளது. இதனை எதிர்த்துப் பாதிக்கப்பட்ட மக்கள் தேவாலயத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது.
துறையூர் உப்பிலியபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டப்பாளையம் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் 74 தலித் கிறிஸ்தவ குடும்பங்களும் அடங்கும். இப்பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஆசிரியரான ராஜ் என்பவர், வயது முதிர்வு காரணமாகக் கடந்த ஜூலை 17-ம் தேதி அன்று உயிரிழந்தார். அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரது உடலைப் பொது கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது தரப்பினர் வலியுறுத்தினர். ஆனால், அதற்கு அங்குள்ள மற்றொரு தரப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக, இறுதிச்சடங்கு செய்ய முடியாமல் கடந்த மூன்று நாட்களாக ஆசிரியரின் உடல் அவரது வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளது.
இத்தகவல் அறிந்து முசிறி சார் ஆட்சியர் சுஷ்ரி சுவாங்கி குந்திய, ஏடிஎஸ்பி தனராஜ், டிஎஸ்பி முத்துக்குமார் உள்ளிட்ட வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இரு தரப்பினரையும் அழைத்து அதிகாரிகள் முன்னிலையில் சுமார் 5 மணி நேரம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும், இரு தரப்பிற்கும் இடையே எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாததால், பொது கல்லறைத் தோட்டத்தில் உடலை அடக்கம் செய்ய முடியாத நிலை நீடித்தது. இதையடுத்து, தங்களுக்குச் சம உரிமை வழங்கி பொது கல்லறையிலேயே உடலை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கூறி, குறிப்பிட்ட சமூகத்தினர் தேவாலயத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோட்டப்பாளையம் ஊராட்சியில் வசிக்கும் கிறிஸ்தவர்களிடையே மேல் ஜாதி, கீழ் ஜாதி என்ற தீண்டாமை நடைமுறை இன்றளவும் நீடித்து வருவது வேதனையளிப்பதாகப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இங்குள்ள கிறிஸ்தவ கல்லறைத் தோட்டம் ரெட்டியார் சமூகத்தைச் சார்ந்த பாதிரியார் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இங்கு இறப்பவர்களின் உடலைச் சுமந்து செல்வதற்கு 2 விதமான வாகனங்கள், இரு வேறு பிரிவினருக்கு எனத் தனித்தனியான பள்ளிகள் (இடங்கள்) எனப் பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. இந்த சாதிய பாகுபாட்டிற்கு எதிராகக் கடந்த 2024-ம் ஆண்டே இப்பகுதி மக்கள் நீதிமன்றம் சென்று, இறந்தவர்களைப் பொது கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்வதில் பாகுபாடு காட்டக் கூடாது என்ற சாதகமான தீர்ப்பையும் பெற்றுள்ளனர்.
நீதிமன்றத் தீர்ப்பு இருந்தபோதிலும், பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்குப் பாடம் கற்பித்த முன்னாள் ஆசிரியர் ஒருவரின் உடலை அடக்கம் செய்வதில் இந்தளவுக்குத் தீண்டாமை ஒடுக்குமுறை தொடர்வது திருச்சி மாவட்டத்தில் பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில், ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண இரு தரப்பினரையும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் மீண்டும் அழைத்துள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்படுமா என்று அப்பகுதி மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
