சென்னை: நடப்பாண்டின் முதல் பாதியில், பயணியர் கார் விற்பனை, இதுவரை காணாத அளவில், ஒவ்வொரு மாதமும் சராசரியாக 4 லட்சத்திற்கு மேற்பட்ட கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதுவரை 25.74 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டு முதல் பாதியை விட நான்கு லட்சம் கார்கள் அதிகம். கடந்த ஜூன் மாத விற்பனை, 24.1 சதவீதம் உயர்ந்து, 3.88 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
நடப்பாண்டின் முதல் காலாண்டில், எஸ்.யூ.வி., – எம்.பி.வி., கார்களின் விற்பனை 20 சதவீதமும், இரண்டாம் காலாண்டில், 28.6 சதவீதமும் உயர்ந்துள்ளன. மொத்த பயணியர் கார் விற்பனையில், எஸ்.யூ.வி., – எம்.பி.வி., கார்களின் பங்கு 68 சதவீதமாக அதிகரித்துள்ளது.
எதிர்பார்த்ததை விட அதிகம்
பயணியர் கார் விற்பனை, ஒவ்வொரு காலாண்டிலும் அதிகரிக்கிறது. நடப்பாண்டில் எதிர்பார்த்ததை விட அதிக கார்கள் விற்பனை செய்யப்படுவதாக டீலர்கள் தெரிவிக்கின்றனர். பயணியர் கார் விற்பனை இதே நிலையில் தொடர்ந்தால், வாகனத் துறைக்கு இந்தாண்டு சாதனை ஆண்டாக இருக்கும். சி.எஸ்.விக்னேஷ்வர், தலைவர், வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு.
