புதுடில்லி: நம் நாட்டில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவை வழங்கப்படும் நகரங்களின் எண்ணிக்கை, அடுத்த மாதம் 17ல் இருந்து 22 ஆக உயர்கிறது.
மேற்காசிய நாடான யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் தலைநகரான அபுதாபிக்கு முக்கிய சுற்றுலா மற்றும் பயணியர் சந்தையாக நம் நாடு உள்ளது. இதனால் நேரடி விமான சேவை வசதியை அதிகப்படுத்தும் முயற்சிகள் தொடர்கின்றன.
இது குறித்து அபுதாபி ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு தலைவர் கார்ஸ்டன் நோர்லண்ட் கூறுகையில், “இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு 70 லட்சம் பயணியர் அபுதாபிக்கு வந்து செல்கின்றனர். அவர்களில் 50 லட்சம் பேர் நேரடி விமான சேவையை பயன்படுத்துகின்றனர்.
‘பயணியர் எண்ணிக்கை ஆண்டுதோறும் 20 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்கிறது. கூடுதல் விமான சேவைகளுக்கு அதிக தேவை இருப்பதால், போக்குவரத்து உரிமைகள் கிடைத்தால் இந்தியா -அபுதாபி இடையேயான இணைப்புகளை மேலும் விரிவுபடுத்த தயாராக உள்ளோம்,” என்றார்.
தற்போது சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 17 நகரங்களில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவை உள்ளது. இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் நவி மும்பை, இந்துார், லக்னோ நகரங்களில் இருந்து அபுதாபிக்கு புதிய சேவையை துவக்கியுள்ளது. அடுத்த மாதம் மேலும் இரு நகரங்களில் இருந்து சேவை துவங்க உள்ளது.
