புதுடில்லி:பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மற்றும் அதனுடன் இணைந்த தொகுதி மறுவரையறை தொடர்பான, 131வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு, தி.மு.க., ஆதரவளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பல மாநிலங்களில் ஆட்சி மாறியதால், பார்லிமென்டிலும் காட்சிகள் மாறும் சூழல் உருவாகியுள்ளது.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடக்கிறது. இதில், பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த கூட்டத்தொடரின் போது, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, அதனுடன் இணைக்கப்பட்ட தொகுதி மறுவரையறை தொடர்பான, 131வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
தோல்வி அடைந்தது
லோக்சபா, ராஜ்யசபா என இரு சபைகளிலும், மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்காததால், ஆளும் பா.ஜ., அரசு கொண்டு வந்த அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா தோ ல்வி அடைந்தது.
இதனால், தேவையான ஆதரவுடன், 131வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக, தி.மு.க., மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன், பா.ஜ., பேச்சு நடத்தி வருகிறது.
மழைக்கால கூட்டத்தொடருக்கான அலுவல் பட்டியலில், இம்மசோதா இடம்பெறவில்லை. இருப்பினும், சில எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற்று, இந்த கூட்டத்தொடரின் போதே, மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
அத்துடன் இந்த கூட்டத்தொடரில், வேறு சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்றவும் மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
மறுபுறம், இந்த கூட்டத்தொடரில், பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக, கட்சி தாவல்கள், ஊழல், விலைவாசி உயர்வு, பெட்ரோலில் எத்தனால் கலப்பு, ‘நீட்’ வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப, எதிர்க்கட்சி களின் ‘இண்டி’ கூட்டணி திட்டமிட்டுள்ளது.
இந்த சூழலில், மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தும் நோக்கில், மத்திய அரசு சார்பில் டில்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
இதில், காங்கிரஸ், தி.மு.க., சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்த தெளிவான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட வேண்டும் என, தி.மு.க., கோரியதாக கூறப்படுகிறது. மேலும், லோக்சபாவில் தற்போதுள்ள எம்.பி.,க்களின் அடிப்படையிலேயே மகளிர் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், அக்கட்சி கோரியதாக சொல்லப்படுகிறது.
தெளிவு தேவை
கூட்டத்திற்கு பின், செய்தியாளர்களிடம் தி.மு.க., – எம்.பி., சிவா கூறியதாவது:
லோக்சபாவில் தற்போதுள்ள எம்.பி.,க்களின் அடிப்படையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றினால், தி.மு.க., ஆதரவு அளிக்கும். எனினும், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் கூடுதல் தெளிவு தேவைப்படுகிறது.
அதை, மத்திய அரசு விளக்க வேண்டும். தொகுதி மறுவரையறை மசோதாவால், பார்லி.,யில் தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் குறையக்கூடாது. அந்த உறுதி அளித்தால், மசோதாவை ஆதரிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
ஒருவேளை பாதிப்பு ஏற்பட்டால், இத்திட்டத்தை அடுத்த 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்து, தி.மு.க., ஆட்சியை இழந்த நிலையில், கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகியது.
இதனால், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, அதனுடன் இணைக்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா போன்ற முக்கியமான மசோதாக்கள் மீதான எதிர்ப்பை கைவிட்டு, தி.மு.க., மென்மையான போக்கை கடைப்பிடிக்க ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது.
பச்சைக்கொடி
இந்த மசோதாக்களை காங்., தொடர்ந்து எதிர்க்கும் சூழலில், மாநிலங்கள் பாதிக்கப்படாத வகையில் திருத்தங்கள் செய்தால், அதை ஆதரிக்க தயாராக இருப்பதாகவே சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும் பச்சைக்கொடி காட்டியுள்ளன.
பல மாநிலங்களில் மாறிய ஆட்சிகள், தற்போது பா.ஜ.,வுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி உள்ளன. ஏனெனில், கடந்த கூட்டத்தொடரின் போது ஓரணியில் நின்ற, ‘இண்டி’ கூட்டணி கட்சிகளுக்குள் தற்போது பிளவு ஏற்பட்டுள்ளதே முக்கிய காரணம்.
மறுபுறம், திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 அதிருப்தி எம்.பி.,க்கள், உத்தவ் சிவசேனா கட்சியின் ஆறு எம்.பி.,க்களும் தங்கள் பக்கம் வந்துள்ளது, பா.ஜ.,வுக்கு பலமாக உள்ளது.
அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள் தாக்கலின் போது, ஆதரவும் இல்லாமல், எதிர்ப்பும் இல்லாமல், தி.மு.க., திரிணமுல் காங்., அதிருப்தி எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தால், அது பா.ஜ.,வுக்கு சாதகமாகவே அமையும்.
