ரோகித் சர்மா சதம் வீண்: தொடரை இழந்தது இந்திய அணி

லார்ட்ஸ்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஏமாற்றிய இந்திய அணி 27 ரன் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது. ரோகித் சர்மா சதம் வீணானது. இங்கிலாந்து அணி 2-1 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.

இங்கிலாந்து சென்ற இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் 3வது போட்டி நடந்தது. இந்திய ‘லெவன்’ அணியில் முழங்கால் காயத்தால் பும்ரா இடம் பெறவில்லை.

டக்கெட் சதம்: இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட், ஜேக்கப் பெத்தல் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 192 ரன் சேர்த்த போது பிரசித் கிருஷ்ணா ‘வேகத்தில்’ பெத்தல் (91) வெளியேறினார். பின் இணைந்த டக்கெட், ஜோ ரூட் ஜோடி நம்பிக்கை தந்தது. குர்னுார் பிரார் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய டக்கெட் சதம் விளாசினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 101 ரன் சேர்த்த போது பிரின்ஸ் யாதவ் பந்தில் டக்கெட் (141) ஆட்டமிழந்தார்.

ரூட் அரைசதம்: மறுமுனையில் அபாரமாக ஆடிய ஜோ ரூட், 39 பந்தில் அரைசதம் விளாசினார். கேப்டன் ஹாரி புரூக் (14) நிலைக்கவில்லை. குர்னுார் பிரார் வீசிய 48வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விரட்டிய பட்லர், பிரசித் கிருஷ்ணா வீசிய 49வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார்.

இங்கிலாந்து அணி 50 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 387 ரன் எடுத்தது. ஜோ ரூட் (74), பட்லர் (41) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட் கைப்பற்றினார்.

ரோகித் விளாசல்: சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, கேப்டன் சுப்மன் கில் ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. அடில் ரஷித் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சுப்மன் கில், அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 147 ரன் சேர்த்த போது அடில் ரஷித் ‘சுழலில்’ சுப்மன் கில் (77) சிக்கினார். பின் இணைந்த ரோகித், விராத் கோலி ஜோடி கைகொடுத்தது. ஜோஷ் டங் வீசிய 29வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்ட ரோகித், அடில் ரஷித் பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஒருநாள் அரங்கில் தனது 34வது சதத்தை பதிவு செய்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 113 ரன் சேர்த்த போது பெத்தல் பந்தில் ரோகித் (138) போல்டானார்.

கோலி அரைசதம்: மறுமுனையில் அசத்திய கோலி, வில் ஜாக்ஸ் பந்தை சிக்சருக்கு அனுப்பி அரைசதம் கடந்தார். சாம் கர்ரான் வீசிய 44வது ஓவரில் இஷான் கிஷான் (14), ஷ்ரேயஸ் ஐயர் (0) அவுட்டாகினர். பெத்தல் பந்தில் சிக்சர் அடித்த கோலி (74), சாம் கர்ரான் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராகுல் (12), அக்சர் படேல் (2) ஏமாற்றினர்.

இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 360 ரன் எடுத்து தோல்வியடைந்தது. குர்னுார் பிரார் (18), அர்ஷ்தீப் சிங் (15) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் சாம் கர்ரான் 4 விக்கெட் கைப்பற்றினார். ஏற்கனவே அயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான ‘டி-20’ தொடர்களை இழந்த இந்தியா, தற்போது ஒருநாள் தொடரையும் பறிகொடுத்தது.

வீரர்கள் அஞ்சலி

வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கேரி சோபர்ஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, போட்டி துவங்குவதற்கு முன் இரு அணி வீரர்களும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். தங்களது கையில், கருப்பு பட்டை அணிந்திருந்தனர்.

Source link