சூலுார்: ”பட்டம் பெறும் இளைஞர்கள், வேலை தேடுபவர்களாக இருக்கக்கூடாது. சுய தொழில் நிறுவனங்களை தொடங்கி, மற்றவர்களுக்கு வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும்,” என, கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேசினார்.
கோவை சூலுார் ஆர்.வி.எஸ்., கலை அறிவியல் கல்லுாரியில், 38வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. 700க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியருக்கு பட்டங்களை வழங்கி, தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேசியதாவது:
பட்டமளிப்பு என்பது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அல்ல; அது நம் சிந்தனை, திறமை, தகுதி மற்றும் சமூகத்திற்கான அர்ப்பணிப்பை மேம்படுத்துவதாகும்.
விஞ்ஞானியான டாக்டர் கஸ்துாரிரங்கன் தலைமையிலான குழுவினர், தேசிய கல்வி கொள்கை 2020ஐ உருவாக்கினர். இது, நினைவாற்றலை சோதிக்கும் தேர்வு முறையல்ல; பல்துறை பாடங்களை சேர்த்து படிக்கும் முறையாகும்.
புத்தக கல்வியோடு கல்வி நிறுவனங்கள் நின்று விடாமல், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
அப்போது தான், சுயசிந்தனை உடைய வல்லுனர்களை உருவாக்க முடியும். மேலை நாட்டு கல்வி முறையை விட, நம் இந்திய கல்வி முறை தொன்மையானது. இங்கிலாந்தின் மாண்டிச்சேரி கல்வி முறை இங்கிருந்து சென்றது தான். நம் பாரம்பரிய கல்வி முறையையும், நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
பட்டங்களை பெறும் இளைஞர்கள், வேலை தேடுபவராக இருக்கக்கூடாது. புதிய தொழில் நிறுவனத்தை தொடங்கி, மற்றவர்களுக்கு வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும்.
இளமைக்கே உரிய துடிப்புடன் சவால்களை எதிர்கொண்டு, புதிய தொழில்களை தொடங்குங்கள்.
அப்போது தான் நீங்கள் பலருக்கும் வேலை கொடுத்து, நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் உங்கள் பங்களிப்பை வழங்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
