சென்னை: பன்றியின் முக தோற்றத்துடன் நடமாடும், அரிய வகை ஊதா தவளைகளை பாதுகாக்க, வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில், சில ஆண்டுகளாக, அரிய வகை சிறிய விலங்குகளை பாதுகாப்பதற்கான பணிகளை, வனத்துறை முடுக்கி விட்டுள்ளது. நீர்நாய், முள்ளெலி, குள்ள நரி என, பல்வேறு வகை சிறிய விலங்குகளுக்கு முக்கியத்துவம் கிடைத்துஉள்ளது.
அந்த வகையில், தற்போது ஊதா தவளைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க, வனத்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டும், ஊதா தவளைகள் காணப்படுகின்றன.
மாறுபட்ட உடல் ஊதா மற்றும் சாம்பல் கலந்த நிறத்தில், வழக்கமான தவளைகளில் இருந்து, மாறுபட்ட உடல் அமைப்புடன், இவை காணப்படுகின்றன.
பன்றியின் முகம் போன்று, இதன் முகப்பு தோற்றம் அமைந்துள்ளது.
பெரும்பாலும், நிலத்துக்கு அடியில் மட்டுமே வசிக்கும் இந்த வகை தவளைகள், மழைக்காலத் தில் தான், இனப்பெருக்கம் போன்ற காரணங்களுக்காக வெளியில் வரும்.
அழிந்து வருகின்றன அதுவும், சில நாட்கள் மட்டுமே தரைக்கு மேல் இருக்கும், அதன்பின் மீண்டும் நிலத்தடி பகுதிக்கு சென்று விடும்.
ஊதா தவளைகள், 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து பூமியில் வசிப்பதாக, பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
எனினும், வனப்பரப்பு குறைவது, நிலத்தில் வெப்பம் அதிகரிப்பது போன்ற காரணங்களால், இந்த வகை தவளைகள் அழிந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எனவே, அழிந்து வரும் நிலையில் உள்ள, ஊதா தவளைகளை பாதுகாப்பதற்கான பணிகளை வனத்துறையினர் தொடங்கி உள்ளனர்.
