சென்னை: தலைமை செயலகத்தில், அமைச்சர்களை சந்திக்க வரும் மக்கள், அமைச்சர்கள் அறை முன் இருக்கை எதுவும் இல்லாததால், தரையில் அமர்ந்தபடி, அமைச்சருக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
தலைமை செயலகத்தில், அமைச்சர்கள் அனைவருக்கும், தனித்தனியே அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்களை சந்திக்க, கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், துறை அதிகாரிகள், தொழில் அதிபர்கள் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் என, தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
முக்கியமான நபர்கள் அமைச்சர்களை சந்திக்க, அவர்களின் உதவியாளர்களிடம் நேரம் பெற்று, அந்த நேரத்திற்கு வருகின்றனர்.
ஆனால், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், எவ்வித முன் அனுமதியும் பெறாமல், நேரடியாக அமைச்சர்களை சந்திக்க, தலைமைச் செயலகம் வருகின்றனர்.
அமைச்சர்களின் அறை உள்ளே, பார்வையாளர்கள் அமர இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அமைச்சரை சந்திக்க முன் அனுமதி பெற்றவர்களை, அமைச்சரின் அலுவலக உதவியாளர்கள், உள்ளே அமர வைக்கின்றனர்.
எவ்வித அனுமதியும் பெறாமல் வருவோர், அமைச்சர்கள் இருந்தால், குறிப்பிட்ட நேரத்தில் உள்ளே அனுமதிக்கப்படுவர். அமைச்சர்கள் இல்லாவிட்டால், அவர்களை அறைக்குள் அனுமதிப்பதில்லை.
அமைச்சர்களின் அறைக்கு வெளியே, பார்வையாளர்கள் அமர, இருக்கை எதுவும் கிடையாது.
எனவே, முன் அனுமதி எதுவும் பெறாமல், அமைச்சர்களை பார்க்க வருவோர், அவர்களது அறை முன், தரையில் அமர்ந்து மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர்.
குறிப்பாக, பள்ளிக்கல்வி, உயர்கல்வித்துறை, வேளாண்துறை, வருவாய் துறை, போக்குவரத்து துறை அமைச்சர்களை சந்திக்க, அதிகம் பேர் வருகின்றனர். அங்கு கூட்ட நெரிசல் அதிகம். அமைச்சர்கள் அறை முன், இருக்கை வசதி இல்லாததால், மக்கள் சிரமப்படுவதுடன், அவர்கள் தரையில் அமர்வதால், அப்பகுதியில் நெரிசல் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, அமைச்சர்களை சந்திக்க வருவோர் அமர, குறிப்பிட்ட இடத்தை ஒதுக்க வேண்டும். அமைச்சர்கள் வந்ததும், அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதேபோல, முன் அனுமதி பெற்றவர்களை சந்திக்க, பொதுமக்களை சந்திக்க என, அமைச்சர்கள் தனித்தனியே நேரம் ஒதுக்கலாம்.
அனைத்து நாட்களும், கட்சியினர் மற்றும் மக்களை சந்திக்காமல், குறிப்பிட்ட நாட்கள், குறிப்பிட்ட நேரங்களில் சந்திக்க நடவடிக்கை எடுக்கலாம்.
இது அமைச்சர்கள் அறை முன், மக்கள் மணிக்கணக்கில் தரையில் அமர்ந்து காத்திருப்பதை தடுக்க உதவும்.
இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
