சென்னை: ‘மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகளை, கழிவுகளாக சேகரிக்க, இருப்பு வைக்க, எடுத்துச் செல்ல, மறுசுழற்சி செய்ய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு செய்து சான்றிதழ் பெறுவது கட்டாயம்’ என, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துஉள்ளது.
நம்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு, கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இந்த வாகனங்களில், மின்சாரத்தை சேமித்து வைத்து பயன்படுத்த, லித்தியம் பேட்டரிகள், அத்தியாவசிய தேவையாக உள்ளன.
பொதுவாக, ‘சார்ஜ்’ செய்து, மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய நிலை யில், லித்தியம் பேட்டரிகள் இருக்கின்றன.
எனினும், குறிப்பிட்ட சில ஆண்டுகள் கடந்த நிலையில், ஆயுள் முடிந்த லித்தியம் பேட்டரிகளை அப்புறப்படுத்தி, புதிய பேட்டரிகளை பயன்படுத்த வேண்டும்.
கழிவுகளாக ஒதுக்கப்படும் லித்தியம் பேட்டரிகள், எளிதில் தீப்பிடிக்கும் தன்மை உடையவை. நிலம், நீர், காற்று போன்ற வற்றில், இந்த கழிவுகள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
அதனால், அபாயகரமான கழிவுகளை கையாள்வதற்கான விதிகள் அடிப்படையில், லித்தியம் பேட்டரி கழிவுகளை கையாள்வதற்கான, விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுஉள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பயன்பாடு முடிந்த லித்தியம் பேட்டரிகளை, பாதுகாப்பாக இருப்பு வைத்து, முறையாக மறுசுழற்சி செய்வது கட்டாயம்.
பழைய லித்தியம் பேட்டரிகளை, மக்களிடம் இருந்து முறையாக திரும்பப் பெறுவது, உற் பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் பொறுப்பாகும்.
இதற்காக தனி மையங்கள் ஏற்படுத்துவதுடன், மக்கள் பழைய பேட்டரிகளை கொடுப்பதற்கான வசதி களையும் ஏற்படுத்த வேண்டும்.
குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், வாடிக்கையாளர் சேவை மையங்கள் போன்ற இடங்களில், பழைய லித்தியம் பேட்டரிகளை சேகரிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துவது கட்டாயம்.
இதுபோன்ற அமைப்புகளை ஏற்படுத்தும் போது, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் தெரிவித்து பதிவு செய்ய வேண்டும்.
பேட்டரி சேகரிப்பு மையங்களின் செயல்பாடு குறித்து, ஆண்டு தோறும் மாநில மாசு கட் டுப்பாட்டு வாரியத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சேகரிப்பு மையங்களில், லித்தியம் பேட்டரிகளை விற்பனை செய்யக்கூடாது.
லித்தியம் பேட்டரி சேமிக்கப்படும் இடங்களில், தீத்தடுப்பு வசதிகள், காற்று, நீர் மாசு ஏற் படாமல் இருப்பதற்கான தடுப்பு வசதிகள் செய்வது கட்டாயம். மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கண்காணிப்பில் மட்டுமே, இந்த மையங்கள் இருக்க வேண்டும்.
லி த்தியம் பேட்டரிகளை, எங்கு எடுத்து செல்வதாக இருந்தாலும், அதற்கு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறுவது கட்டாயம். இதில் தொடர்புள்ள நிறுவனங்கள், இந்த விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
